இந்த நாடு யாருடைய தந்தைக்கும் சொந்தமானது அல்ல.. பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுத்த பீகாரின் முன்னாள் அமைச்சர்

 
அப்துல் பாரி சித்திக்

குடும்பத்துடன் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று பா.ஜ.க. தலைவர் கூறியதற்கு, இந்த நாடு யாருடைய தந்தைக்கும் சொந்தமானது அல்ல என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் அப்துல் பாரிக் சித்திக் பதிலடி கொடுத்துள்ளார்.

பீகாரின் முன்னாள் அமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அப்துல் பாரி சித்திக் கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், எனக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு மகனும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸில் தேர்ச்சி பெற்ற ஒரு மகளும் உள்ளனர். எனது மகனையும், மகளையும் அங்கு மட்டுமே வேலை செய்யும்படியும், முடிந்தால் அந்நாட்டின் குடியுரிமையை பெறுங்கள் என்றும் சொன்னேன். இங்குள்ள (இந்தியாவில்) நிலவும் சூழ்நிலையை உங்களால் தாங்க முடியுமா இல்லையா என்று எனக்கு தெரியாது என்று அவர்களிடம் சொன்னேன் என தெரிவித்தார்.

பாகிஸ்தான்

அப்துல் பாரி சித்திக்கின் கருத்து சர்ச்சையை கிளப்பியது. மேலும் பா.ஜ.க. அவரை கடுமையாக விமர்சனம் செய்தது. பா.ஜ.க.வின் நிகில் ஆனந்த் இது தொடர்பாக கூறியதாவது: நாட்டின் குடிமக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் தேச விரோத கருத்துக்காக சித்திக் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்துல் பாரி சித்திக் இந்தியாவில் நிலவும் சூழ்நிலையை கடினம், சங்கடமானதாக கண்டால்,  அவர் ஒரு அரசியல் தலைவராக அனுபவிக்கும் அனைத்து சலுகைகளையும் விட்டுவிட வேண்டும். அவரது முழு குடும்பமும் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகில் ஆனந்த்

குடும்பத்துடன் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று பா.ஜ.க.வின் நிகில் ஆனந்த் கூறியது அப்துல் பாரி சித்திக்குக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் அப்துல் பாரி சித்திக், இந்த நாடு யாருடைய தந்தைக்கு சொந்தமானது அல்ல என்று தெரிவித்தார். பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.