பொறாமைக்கு மருந்து இல்லை, நிதிஷ் குமார் ஏழு ஜென்மத்திலும் பிரதமராக முடியாது... ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவர்

 
நிதிஷ் குமார்

பொறாமைக்கு மருந்து இல்லை. நிதிஷ் குமார் ஏழு ஜென்மத்திலும் பிரதமராக முடியாது என்று ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவர் ஆர்.சி.பி. சிங் கடுமையாக தாக்கினார் 

ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆர்.சி.பி. சிங், நிதிஷ் குமாருக்கு மிகவும் நெருக்கமானவர். ஆர்.சி.பி. சிங் மாநிலங்களவை  எம்.பி.யாக இருந்தபோது, ஐக்கிய ஜனதா தளத்தின் கூட்டணி கட்சியான பா.ஜ.க.வுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். இது நிதிஷ் குமாருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. மேலும், கட்சி தலைவரின் அனுமதியின்றி மத்திய அமைச்சர் பதவியை ஆர்.சி.பி. சிங் ஏற்றுக் கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் நிதிஷ் குமார் அனுமதி கொடுத்துதான் நான் மத்திய அமைச்சர் பதவியை ஏற்றேன் என்று ஆர்.சி.பி. சிங் தெரிவித்தார்.

ஆர்.சி.பி. சிங்

இருப்பினும், ஆர்.சி.பி. சிங்குக்கும், நிதிஷ் குமாருக்கும் இடையிலான உறவில் விரிசல் பெரிதாகி கொண்டே சென்றது. மேலும், அண்மையில், நடைபெற்ற நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட  ஆர்.சி.பி. சிங்குக்கு  ஐக்கிய ஜனதா தளம் டிக்கெட் கொடுக்க மறுத்து விட்டது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய ஜனதா தளம், ஆர்.சி.பி. சிங்கிடம் அவரது மகளுடன் தொடர்புடைய சொத்துக்களில் முறைகேடுகள் குறித்து விளக்கம் அளிக்கும்படி ஒரு கடிதம் அனுப்பியது. இது ஆர்.சி.பி. சிங்குக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து,  கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஆர்.சி.பி. சிங் ராஜினாமா செய்தார். 

ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க.

மேலும், நான் மத்திய அமைச்சராக ஆனதால்  எனக்கு எதிராக சதி நடக்கிறது. பொறாமைக்கு மருந்து இல்லை. நிதிஷ் குமார் ஏழு ஜென்மத்திலும் பிரதமராக முடியாது. ஐக்கிய ஜனதா தளம் மூழ்கும் கப்பல் என்று ஆர்.சி.பி. சிங் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஆர்.சி.பி. சிங் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நிதிஷ் குமார் பழிவாங்கும் குணம் கொண்டவர், அதனால்தான் நிதிஷ் குமார் இவ்வளவு தாழ்ந்து எனது மகள்களை குறிவைத்தார். அந்த சொத்துக்கள் 2020 முதல் வருமான வரி செலுத்தும் எனது மனைவி மற்றும் மகள்களால் வாங்கப்பட்டது. அந்த கடிதம் என்னை அவமானப்படுத்தும் முயற்சி என்று தெரிவித்தார்.