பொது சிவில் சட்டம் உள்பட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.. உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உறுதி

 
பொது சிவில் சட்டம்

பொது சிவில் சட்டம் உள்பட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என உத்தரகாண்ட் முதல்வராக தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்று பதவியேற்கும் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.


உத்தரகாண்ட் பா.ஜ.க. சட்டப்பேரவை கட்சியின் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு புஷ்கர் சிங் தாமி நேற்று முன்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று உத்தரகாண்ட் முதல்வராக பதவியேற்க உள்ளார். முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பிறகு புஷ்கர் சிங் தாமி கலந்து கொண்ட முதல் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: தேர்தலுக்கு முன்பாக மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். பொது சிவில் சட்டம் அவற்றுள் முக்கியமான ஒன்றாகும். அதையும் நிறைவேற்றுவோம்.

புஷ்கர் சிங் தாமி

பிரதமரின் தொலைநோக்கு பார்வையில் நம்பிக்கை வைத்து பா.ஜ.க.வுக்கு பெரிய வெற்றியை கொடுத்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை போன்ற ஒரு சாதாரண தொண்டன் மற்றும் ராணுவ வீரரின் மகன் மீதும் நம்பிக்கை வைத்த பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் உத்தரகாண்ட் கட்சியின் மத்திய பார்வையாளராக இருந்த ராஜ்நாத் சிங் ஆகியோருக்கும் நன்றி. வெளிப்படையான ஆட்சியை வழங்குவோம். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி உத்தரகாண்ட் வளர்ச்சிக்கான தனது தொலைநோக்கு பார்வையை எங்களுக்கு வழங்கியுள்ளார். பத்தாண்டுகள் மாநிலத்துக்கு சொந்தமானது. 2025ம் ஆண்டு வெள்ளி விழாவை கொண்டாடும் போது, அவரது தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப செயல்பட்டு, உத்தரகாண்ட் மாநிலத்தை  முன்னணி மாநிலமாக மாற்றுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.