நான் அற்ப அரசியலில் ஈடுபடமாட்டேன். எனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் நான் முதல்வர்... பஞ்சாப் முதல்வர் மான்

 
பகவந்த் மான்

நான் அற்ப அரசியலில் ஈடுபடமாட்டேன். எனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் நான் முதல்வர் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதிகபட்சமாக 92 இடங்களில் வெற்றி பெற்று முதல் முறையாக அந்த மாநிலத்தில் ஆட்சியை பிடித்தது. நவன்ஷாஹர் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் மூதாதையர் கிராமமான கட்கர் கலனில் நேற்று பஞ்சாபின் 17வது முதல்வராக பகவந்த் மான் பொறுப்பேற்றார். இந்த பதவியேற்பு விழாவில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆம் ஆத்மி

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகையில் கூறியதாவது: நான் அற்ப அரசியலில் ஈடுபடமாட்டேன். எனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் நான் முதல்வர். இது அவர்களின் அரசும், அவர்களுக்காகவும் பாடுபடுவோம். இது ஜனநாயகம் மற்றும் அனைவருக்கும் (அரசியல் சித்தாந்தத்தை தேர்ந்தெடுக்க) உரிமை உள்ளது. நான் திமிர் பிடித்தவன் என்று மக்கள் நினைப்பதை நான் விரும்பவில்லை.

அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவை பற்றி பகத்சிங் கவலைப்பட்டார். நாங்கள் இங்கு தங்கி நமது நிலத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்வோம். வேலையில்லாத் திண்டாட்டம் முதல் விவசாயம் வரை அனைத்தையும் சரி செய்வோம், சிறிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம். பஞ்சாபில் பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் கட்டுவோம். எங்களுக்கு தேவை உங்கள் ஆசிர்வாதம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இன்றைய பதவியேற்பு விழாவில் முதல்வர் பகவந்த் மானுடன் 16 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொண்டனர்.