சபர்மதி ஆசிரமத்துக்கு சென்ற ஆம் ஆத்மி முதல்வர்கள்.. குஜராத் தேர்தலை மனதில் வைத்து காய்களை நகர்த்தும் ஆம் ஆத்மி

 
ஆம் ஆத்மி

இந்த  ஆண்டு இறுதியில் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், அககதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு ஆம் ஆத்மி முதல்வர்கள் அரவிந்து கெஜ்ரிவாலும், பகவந்த மான் நேற்று சென்றனர்.

குஜராத்தில் தற்போது பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் 182 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அந்த கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து இருந்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

அண்மையில் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி அம்மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது. இது தேசிய அளவில் ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் மத்தியில் ஒரு அலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அலையை எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பயன்படுத்தி கொள்ள ஆம் ஆத்மி கச்சிதமாக காய்களை நகர்த்த தொடங்கியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு  நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும்  சென்றனர். 

சபர்மதி ஆசிரமத்தில் கெஜ்ரிவால், பகவந்த் மான்

சபர்மதி ஆசிரமத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலும், பகவந்த் மானும் ராட்டையில் நூல் நூற்றினர். அதன் பின் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த இடத்தில் இருப்பது மிகவும் நன்றாக இருந்தது. இங்கு மிகவும் வித்தியாசமான உணர்வு இருக்கிறது. பஞ்சாபில் அனைவரின் வீட்டிலும் ஒரு சர்க்கா (ராட்டை) உள்ளது.நாங்கள் காந்திஜியுடன் மிகவும் பற்று கொண்டுள்ளோம். நாங்கள் தேசியவாதிகள், நாங்கள் எங்கள் நாட்டையும் மக்களையும் நேசிக்கிறோம் என்று தெரிவித்தார். அதேசமயம் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம், இந்த இடத்தில் நாங்கள் அரசியல் பேச மாட்டோம் என்று தெரிவித்தார்.