மசூதிகளிலிருந்து ஒலி பெருக்கிகளை அகற்றாவிட்டால் அடுத்து இதுதான்.. காவல்துறைக்கு ஷாக் கொடுக்கும் ராஜ் தாக்கரே கட்சி
மசூதிகளிலிருந்து ஒலி பெருக்கிகளை அகற்றாவிட்டால், காவல் நிலையங்களுக்கு முன் ஹனுமன் கீர்த்தனைகளை இசைப்போம் என மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சி எச்சரிக்கை செய்துள்ளது.
மகாராஷ்டிராவில் மே 3ம் தேதிக்குள் மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் ஹனுமான் பாடல்களை ஒலிபெருக்கிகளில் இசைப்போம். இந்த விஷயத்தில் நாங்கள் பின்வாங்க மாட்டோம் என அண்மையில் மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே அம்மாநில அரசுக்கு எச்சரிக்கை செய்து இருந்தார். காலக்கெடு முடிந்தவுடன், மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா தொண்டர்கள் சில மசூதிகளுக்கு வெளியே ஒலி பெருக்கிகள் வைத்து ஹனுமன் கீர்த்தனைகளை இசைக்க முயற்சி செய்தனர். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், ஒலி பெருக்கிகள் பிரச்சினை முடிந்து விட்டதாக நான் நினைக்கிறேன் என சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் தெரிவித்து இருந்தார். ஆனால் ஒலி பெருக்கிகள் விவகாரம் இன்று முடிவுக்கு வராது போல் தெரிகிறது. ஏனென்றால், மசூதிகளில் இருந்து ஒலி பெருக்கிகளை அகற்றாவிட்டால் நகரத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு முன் ஹனுமன் கீர்த்தனைகளை இசைப்போம் என மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சியின் புனே பிரிவு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சியின் புனே பிரிவு அந்நகர காவல்துறை ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாங்கள் அசானுக்கு (தொழுகைக்கான அழைப்பு) எதிரானவர்கள் அல்ல. ஆனால் ஒலி பெருக்கிகளில் அதை செய்யக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அனைத்து பள்ளிவாசல்களின் மௌலவிகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடக்கூடாது என்பதற்காக, ஒலி பெருக்கிகளை அகற்றி விட்டோம் அல்லது ஒலி பெருக்கிகள் வாயிலான அசானை செய்வதை நிறுத்தி விட்டோம் என்று காவல்துறை மூலம் எழுத்துப்பூர்வமாக எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.