பாஜக அதிமுகவின் ஓபிஎஸ் உடன் மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும்- புகழேந்தி

 
pugalendhi

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக அதிமுகவின் ஓபிஎஸ் உடன் மட்டுமே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

pugalendhi | Tamilnadu Flash News

கோவையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, “நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வி கண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஈரோடு கிழக்கு தொகுதியிலும் போட்டியிட கோருகின்றனர். வாசனிடம் மீண்டும் அத்தொகுதியை ஒப்படைத்து விட்டு எடப்பாடி பழனிசாமி தப்பிவிட நினைக்கிறார். ஈரோட்டில் போட்டியிட நாங்கள் தயாராக இருக்கிறோம். ஓபிஎஸ் என்ன சொல்கிறார் என்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறோம். 

இரட்டை இலைக்கு சொந்தக்காரர் ஓபிஎஸ் மட்டுமே. கூட்டணி தொடர்பாக பாஜக ஓபிஎஸ் உடன் பேசி தான் முடிவு செய்வார்கள். சொந்த தொகுதியில் நின்று தோல்வி கண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அரசியல் அனாதை ஆகி விட்டார். அவருக்கு கருத்து சொல்ல உரிமை இல்லை. திரை மறைவில் அதிமுகவை ஒழிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். பழனிசாமி என்ற சர்வாதிகாரி ஒழிய வேண்டும் என்பதற்காகவே தான் ஓபிஎஸ் உடன் இருக்கிறேன். 

தற்போது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை விட முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி புத்திசாலி. கள நிலவரம் தெரிந்தவர். தனது இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்து விட்டதால் தற்போது அவருக்கு கட்சியில் எந்த பதவியும் இல்லை. அதிமுகவிற்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. மேலும் எடப்பாடி பழனிசாமி உடன் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெற்றி பெற்றது பன்னீர்செல்வத்தால் மட்டுமே. ரோஷம் இருந்தால் எடப்பாடி பழனிசாமி பதவியை ராஜினாமா செய்யட்டும்” எனக் கூறினார்.