குற்ற உணர்வு உள்ள இபிஎஸ் ஓபிஎஸ்-ஐ நேரில் பார்ப்பதற்கு தயக்கம்- புகழேந்தி

 
pugalendhi pugalendhi

குற்ற உணர்வு உள்ள இபிஎஸ் ஓபிஎஸ்-ஐ நேரில் பார்ப்பதற்கு தயக்கம் காட்டுவதாக புகழேந்தி விமர்சித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அதிமுக முன்னால் செய்தி தொடர்பாளரும் ஓபிஎஸ் ஆதரவான புகழேந்தி செய்தியாளர்களிடையே பேசினார்

அப்போது பேசிய அவர், "அதிமுகவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மறைவுக்கு பின்பு ஒற்றை தலைமை என்கின்ற சர்ச்சையே, அர்த்த ராத்திரியில் ஆதாரம் இல்லாமல் கள்ளத்தொடர்பினால் பிறந்த குழந்தை தான் அது. ஆகவே கேபி முனுசாமி போன்ற துரோகிகள் இதுகுறித்து பேசக்கூடாது. மேலும் பொதுக்குழுவை நடத்த விடாமல் குறுக்கீடு செய்தவரும் கேபி முனுசாமி தான். 

அப்போது தர்மயுத்தம் நடத்திய தியாகி என்றெல்லாம் கூறி, ஓபிஎஸ் உடன் இணைந்து ஆதாயம் பெற்று அவரால் சென்னை டெய்லர் சாலையில் சொகுசு குடியிருப்பில் ஒதுக்கீடு செய்து கொண்ட கேபி முனுசாமி அந்த வீட்டை காலி செய்ய வேண்டும். 

அதேபோல இபிஎஸ்ஸும் முதலமைச்சர் காலில் விழுந்து தான் ஏற்கனவே குடியிருந்த அரசு வீட்டை தனக்கு மீண்டும் ஒதுக்க வேண்டும் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டு குடியிருக்கும் பழனிசாமியும் அதை காலி செய்ய வேண்டும். எனவே இவர்கள்தான் திமுகவுடன் ரகசிய தொடர்பில் உள்ளனர் என்பது இப்பொழுதே அம்பலம்.  

நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவையில் துரோகிகளில் மிகச்சிறந்தவரான பழனிசாமி குற்ற உணர்வின் காரணமாக ஓபிஎஸ்ஐ நேருக்கு நேர் பார்ப்பதற்கு தயக்கம் காரணத்தினாலேயே சபாநாயகர் ஒதுக்கீடு செய்யும் இருக்கைகளை மாற்ற வேண்டும் என துடிதுடிக்கிறார்கள்.

கட்சியின் இனிப்புக்கு இடையூறாக இருப்பவர்களில் முக்கிய காரணமாக கே பி முனுசாமி, சிவி சண்முகம், ஜெயகுமார் போன்றவர்கள் இருப்பதால்தான் இணைப்புக்கு சாத்தியமே இல்லை என்று இபிஎஸ் தொடர்ந்து கூறி வருகிறார். எனவே ஓபிஎஸ் எப்பொழுதும் ஒற்றுமையே விரும்புபவர் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். ஆகவே கேபி முனுசாமி தனது சொந்த மாவட்டத்திலேயே செல்வாக்கை இழந்து கொண்டிருக்கிறார் என்பது தான் நிதர்சனம். 

மொழி பிரச்சனைகளில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் எடுத்த இரு மொழி கொள்கை நிலைப்பாடு தான் ஓபிஎஸ் இன் நிலைப்பாடும். ஆகவே மூன்றாவது மொழி என்பதற்கும் அதை தமிழகத்தில் திணிக்கும் முயற்சி என்றும் பலிக்காது" என்றார்.