எடப்பாடி பழனிசாமி தனி மனிதனாக தான் நிற்பார்; அதை தமிழகம் பார்க்கும்- புகழேந்தி
அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.பி மற்றும் 2 முன்னாள் எம்எல்ஏக்கள் ஓபிஎஸ்-க்கு நேரில் ஆதரவு தெரிவித்தனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அவ்வப்போது தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்றைய தினம் நாமக்கல் ,கிருஷ்ணகிரி ,விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் சந்தித்தார். அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ்க்கு பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்தும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அப்போது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.பி செஞ்சி ஏழுமலை, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜ் ஆகியோர் ஓபிஎஸ்-க்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, “எடப்பாடி பழனிசாமி தனி மனிதனாக தான் நிற்பார். அதை தமிழகம் பார்க்கும். நாடு போற்றும் நல்ல தீர்ப்பு நாளை வரும். நாளைய தீர்ப்புக்கு பின் ஜெயக்குமார், சி.வி சண்முகம் எங்கே இருப்பார்கள்? என்ற நிலை வரும்” எனக் கூறினார்.