உதயகுமாரின் கேள்விக்கு பதில் சொல்ல விரும்பாத பிடிஆர்

முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமாரின் கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்த நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், உதயகுமார் செய்த ஊழல் பற்றி பேசுவதற்கு நேரம் போதாது என்று சொன்னார்.
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மதுரையில் எந்த ஒரு வளர்ச்சி திட்டங்களும் செய்யப்படவில்லை என்று விமர்சித்திருந்தார் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன். இதற்கு பதிலடி கொடுத்து ஆர்பி உதயகுமார் அறிக்கை ஒன்று வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கதையாக உள்ளது பி டி ஆர் பேசுவது. இதை மதுரை மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள். கடந்த 10 ஆண்டுகளில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற எந்த பாரபட்சமும் இல்லாமல் திட்டங்களை ஜெயலலிதா அரசு வழங்கியது . அதனால்தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட திமுகவின் பல்வேறு அவதூறு பிரச்சாரங்களை மீறி மதுரை மக்கள் 5 தொகுதிகளை அதிமுகவிற்கு வழங்கினார்கள் என்று தெரிவித்திருந்தார்.
மேலும், ஜெயலலிதா அரசு செய்த பல்லாயிரம் கோடி வளர்ச்சி சாதனை திட்டங்களை எதுவும் செய்ய முடியவில்லை என்று சொல்லி, முழு பூசணிக்காயை சோத்தில் மறைக்க முடியாது. பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிட்டது என்று நினைக்க கூடாது என்று தெரிவித்தார்.
அவர் மேலும் அவ்வறிக்கையில், நிதி அமைச்சர் பொறுப்பில் உள்ள நீங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கான திட்டங்கள் செய்ய வேண்டும் . தற்போது தான் மதுரை மாநகராட்சிக்கு மாஸ்டர் பிளான் எனக் கூறி உள்ளீர்கள். இதுவரை கடந்த ஒன்றரை ஆண்டு கால ஆட்சியில் மதுரை மாவட்ட வளர்ச்சிக்கு எந்த திட்டங்கள் செய்யப்பட்டது என்று பட்டியலிட்டு சொல்ல முடியுமா? என்ற கேள்வியை எழுப்பி இருந்தார்.
வாய்ச்சொல் வீரராக இருப்பது வளர்ச்சியை தந்து விடாது. மதுரை மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் தமிழகத்திற்கு நிதியை ஒதுக்கும் மந்திரியாக உள்ளீர்கள் . மதுரை மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காக என்னென்ன சிறப்புகள் கொண்டு வந்தீர்கள் என்று விளக்கம் சொன்னீர்கள் என்றால் உங்களைத் தேர்ந்தெடுத்த மக்கள் மட்டுமல்லாது நானும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த திறப்பு விழாவில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி , நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றனர். செய்தியாளர்களிடம் பிடிஆர் பேசிய போது, அதிமுக ஆட்சி காலத்தில் எந்த திட்டமும் செய்யவில்லை என்ற பி டி ஆரின் பேச்சு முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் அறிக்கை விடுத்துள்ளது குறித்த கேள்விக்கு, ஆர்பி உதயகுமாரின் கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்று சொன்னவர், ஆர்பி உதயகுமார் செய்த ஊழல் குறித்து பேசுவதற்கு நேரம் போதாது என்று சொல்லிவிட்டு அது குறித்த பேச்சினை அதற்கு மேல் தவிர்த்தார்.