பா.ஜ.க. தனது ஜனநாயக விரோத அரசியலுக்கு எதிராக நிற்கும் குரல்களை ஒடுக்க ஒவ்வொரு தந்திரத்தையும் கையாள்கிறது... பிரியங்கா

 
பிரியங்கா காந்தி

சிவ சேனா சஞ்சய் ரவுத்திடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதை குறிப்பிட்டு, பா.ஜ.க. தனது ஜனநாயக விரோத அரசியலுக்கு எதிராக நிற்கும் குரல்களை ஒடக்க ஒவ்வொரு தந்திரத்தையும் கையாள்கிறது என பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார்.

பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு கடந்த மாதம் 28ம் தேதி ஆஜராகும்படி சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரவுத்துக்கு அமலாக்கத்துறை முதலில் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் மகாராஷ்டிராவில் நிலவிய அரசியல் குழப்பம் காரணமாக விசாரணைக்கு ஆஜராக காலஅவகாசம் அளிக்கும்படி சஞ்சய் ரவுத் அமலாக்கத்துறையிடம் வேண்டுகோள் விடுத்தார்.

சஞ்சய் ரவுத்

ஜூலை 1ம் தேதி (கடந்த வெள்ளிக்கிழமை) ஆஜராகும்படி சஞ்சய்ரவுத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதனையடுத்து, சஞ்சய் ரவுத் நேற்று அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சென்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த பிறகு சஞ்சய் ரவுத் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு பொறுப்புள்ள குடிமகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், விசாரணை அமைப்பு தனக்கு சம்மன் அனுப்பினால் ஆஜராக வேண்டியது எனது கடமை. ஆனால் நேர நிர்ணயத்தில்தான் பிரச்சினை. ஆனால் அவர்களுக்கு சந்தேகம் இருந்தது. அமலாக்கத்துறை அதிகாரிகள் என்னிடம் நன்றாக நடந்து கொண்டனர். தேவைப்பட்டால் நான் மீண்டும் வருவேன் என்று அவர்களிடம் தெரிவித்தேன் என்று தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் நாராயண் ரானே மீதான நடவடிக்கை பழிவாங்கும் அரசியல் அல்ல.. சஞ்சய் ரவுத்

இந்நிலையில், சஞ்சய் ரவுத்துக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி குரல் கொடுத்துள்ளார். பிரியங்கா காந்தி டிவிட்டரில், சஞ்சய் ரவுத்துக்கு எதிரான நடவடிக்கை பழிவாங்கும் நடவடிக்கை மற்றும் தீமையால் ஈர்க்கப்பட்டது. பா.ஜ.க. தனது ஜனநாயக விரோத அரசியலுக்கு எதிராக நிற்கும் குரல்களை ஒடக்க ஒவ்வொரு தந்திரத்தையும் கையாள்கிறது. ஆனால் ஜனநாயகத்தில் பொய் மற்றும் அடக்குமுறையின் குச்சி நீண்ட காலம் நீடிக்காது என பதிவு செய்துள்ளார்.