பணவீக்கம் பற்றி விவாதிப்பது நாடாளுமன்ற மரபுக்கு புறம்பானதாக ஆகுமா?.. பிரியங்கா காந்தி தாக்கு...

 
பிரியங்கா காந்தி

பணவீக்கம் பற்றி விவாதிப்பது நாடாளுமன்ற மரபுக்கு புறம்பானதாக ஆகுமா? என்று மத்திய அரசை பிரியங்கா காந்தி கிண்டலாக தாக்கியுள்ளார்.

நம் நாட்டில் பணவீக்கம் அதிகமாக உள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 7.01  சதவீதமாக குறைந்துள்ளது.  இருப்பினும் இது ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ள சில்லரை விலை பணவீக்கத்துக்கான அதிகபட்ச வரம்பான 6 சதவீதத்தை காட்டிலும்  அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.  பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பணவீக்கம்

இந்நிலையில், பணவீக்கம் மற்றும் அன்றாட பயன்பாட்டு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. உயர்வுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும்,  நாடாளுமன்றத்தில் பணவீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரி கடந்த திங்கட்கிழமை முதல் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

மோடி

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட்டரில், பா.ஜ.க. தலைமையிலான அரசாங்கம் மாவு, தானியங்கள்,  வெல்லம் மற்றும் தயிர் மீது (வீடுகளை அழிக்கும் வரி) விதித்ததன் மூலம் பணவீக்கத்தின் சுமையை மேலும் அதிகரித்தது. நரேந்திர மோடி ஜி செலவினங்களை அதிகரித்து, நாடாளுமன்றத்தில் விவாதம் செய்வதிலிருந்து விலகுகிறார். பணவீக்கம் பற்றி விவாதிப்பது நாடாளுமன்ற மரபுக்கு புறம்பானதாக ஆகுமா? என பதிவு செய்துள்ளார்.