பணத்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று பா.ஜ.க.வுக்கு பாடம் கற்பியுங்கள்.. இமாச்சல் மக்களிடம் பிரியங்கா காந்தி வலியுறுத்தல்
பணத்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று பா.ஜ.க.வுக்கு பாடம் கற்பியுங்கள் என்று இமாச்சல பிரதேச மக்களிடம் பிரியங்கா காந்தி வலியுறுத்தினார்.
இமாச்சல பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் இம்மாதம் 12ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இமாச்சல பிரதேசம் உனாவில் காங்கிரஸ் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற பிரியங்கா காந்தி பேசுகையில் கூறியதாவது: ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்தல் வருகிறது. அது என்ன பெரிய விஷயம், நினைவில் கொள்ளுங்கள், இந்த தேர்தல்கள் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும். காங்கிரஸ் ஆளும் மாநிலங்கங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை பெறுகிறார்கள் ஆனால் இங்குள்ள மக்கள் ஏன் அதை பெறுவதில்லை, யோசித்துப் பாருங்கள்.
பா.ஜ.க. தலைவர்கள் வந்து எங்களுக்கு வாக்களியுங்கள் உங்களுக்கு இரட்டை என்ஜின் ஆட்சி கிடைக்கும் என்று கூறுகிறார்கள், அவர்கள் ஐந்து ஆண்டுகளாக எங்கே இருந்தார்கள், அது (இரட்டை என்ஜின்) கடந்த ஐந்து ஆண்டுகளாக இருந்தது. ஒரு வேளை என்ஜினில் அவர்கள் (பா.ஜ.க.) எரிபொருளை நிரப்ப மறந்து இருப்பார்கள். வேலைவாய்ப்பை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதல் பொறுப்பு, ஆனால் மாநிலத்திலும் மத்தியிலும் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தாலும், இமாச்சல பிரதேசத்தில் 63 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் ஏன் நிரப்பப்படவில்லை. எங்களின் முதல் அமைச்சரவையில் 1 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்க முடிவு எடுப்போம்.
அவர்கள் (பா.ஜ.க.) இது சாத்தியமில்லை என்று கூறுகிறார்கள், சத்தீஸ்கரில் இதை எப்படி செய்ய முடிந்தது. இன்று வேலையின்மை விகிதம் அந்த மாநிலத்தில் மிகவும் குறைவாக உள்ளது. ஏனெனில் எங்கள் அரசாங்கம் கடந்த 3 ஆண்டுகளில் ஐந்து லட்சம் வேலைகளை வழங்கியுள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசாங்கம் 1.3 லட்சம் வேலைகளை வழங்கியுள்ளது. ஆனால் இங்கு 63 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இங்குள்ள இளைஞர்கள் திறமையானவர்களாகவும் படித்தவர்களாகவும் உள்ளனர். ஆனால் அவர்களின் ஆசைகள் நிறைவேறவில்லை. போதை பொருட்களின் பயன்பாடு பரவுகிறது. ஆட்சியில் நீடிக்க அவர்கள் (பா.ஜ.க.) எதையும் சொல்வார்கள். பணத்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று அவர்களுக்கு பாடம் கற்பியுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.