பிரியங்கா காந்தி இன்று கர்நாடகா வருகை.. மகளிர் காங்கிரஸ் மாநாட்டில் 2வது பெரிய தேர்தல் வாக்குறுதியை அறிவிக்கிறார்..

 
பிரியங்கா காந்தி

கர்நாடகாவில் இன்று நடைபெற உள்ள மகளிர் காங்கிரஸ் மாநாட்டில் பிரியங்கா காந்தி கலந்து கொள்கிறார். மேலும் அந்த மாநாட்டில் அம்மாநில மக்களுக்கு காங்கிரஸின் இரண்டாவது பெரிய தேர்தல் வாக்குறுதியை அறிவிக்க உள்ளதாக தகவல்.

கர்நாடகாவில் வரும் மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக தேர்தலுக்கு தயாராகி வரும் காங்கிரஸ், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் மாநாடுகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் மகளிர் காங்கிரஸ் மாநாட்டை நடத்த உள்ளது. இந்த மாநாட்டில் அந்த கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்க உள்ளார்.

காங்கிரஸ்

இந்த மாநாட்டில் பிரியங்கா காந்தி, கர்நாடக மக்களுக்கு காங்கிரஸின் இரண்டாவது பெரிய தேர்தல் வாக்குறுதியை அளிப்பார் என்று கூறப்படுகிறது. அண்மையில் கர்நாடக காங்கிரஸ் தனது பேருந்து யாத்திரையை தொடக்க விழாவில் யாரும் எதிர்பாராத வண்ணம் தனது முதல் தேர்தல் வாக்குறுதியை அளித்தது. அதாவது, கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், அனைத்து வீடுகளுக்கு மாதந்தோறும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தது. இந்நிலையில் தற்போது நாளை இரண்டாவது வாக்குறுதியை பிரியங்கா காந்தி அறிவிப்பார் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

இன்று நடைபெறும் மகளிர் காங்கிரஸ் மாநாட்டில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா, அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் சுமார் 15 ஆயிரம் மகளிர் காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்வார்கள் என தகவல்.