காந்தியா, காந்தி அல்லாதவரா என்பது விஷயமல்ல.. தேர்தல் மூலம் காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.. பிரித்விராஜ்

 
பிரதமர் மோடியின் நமோ செயலி இந்தியர்களின் தனியுரிமைகளை மீறியது.. பிரித்விராஜ் சவான் பகிரங்க குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், பரிந்துரை மூலம் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என அந்த கட்சியின் மூத்த  தலைவர்களில் ஒருவரான பிரித்விராஜ் சவான் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வருமான பிரித்விராஜ் சவான் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பிரசாந்த் கிஷோர் காங்கிரஸின் நிர்வாகியாக இருக்கமாட்டார் என்பது தெளிவாகிறது. ஆனால் அவர் இப்போதும் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பாளராக இருக்க முடியும். அகமது படேலின் மறைவுக்கு பிறகு, காங்கிரஸிடம் ஒத்தகருத்துள்ள கட்சிகளுடன் ஒருங்கிணைக்கக் கூடியவர்கள் யாரும் இல்லை. பிரசாந்த் கிஷோரால் அனைத்து கட்சிகளையும் ஒரு மேசைக்கு கொண்டு வர முடியும். சில மாதங்களுக்கு முன் பிரசாந்த் கிஷோர் என்னை சந்தித்து பேசினார். 

பிரசாந்த் கிஷோர்

அப்போது, நரேந்திர மோடி ஜனநாயகத்துக்கு ஆபத்து என்பதால் அவரை தடுக்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் என்னிடம் கூறினார். கிஷோர் கிட்டத்தட்ட காங்கிரஸில் சேர்ந்து விட்டார். இருப்பினும் பல நிபந்தனைகளை விதித்தார். இந்த நிபந்தனைகள் ஏற்கப்படாததால் அவர் பின்வாங்கினார்.  காங்கிரஸ்  தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்பதே ஜி 23 தலைவர்களின் முக்கிய கோரிக்கை. பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ராகுல் ஜி கூட போட்டியிட்டு வெற்றி பெற முடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைவருக்கு மற்ற கட்சிகளுடன் சீட் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்த அதிகாரம் இருக்கும். அவர் அல்லது அவள் (தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர்) உறுதியான முடிவுகளை எடுக்கும் நிலையில் இருப்பார். 

ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் காந்தியா இருக்க வேண்டுமா அல்லது காந்தி அல்லாதவராக இருக்க வேண்டுமா என்று நான் பேசவில்லை. அந்த நபர் (காங்கிரஸ் தலைவர்) தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதை மட்டுமே நான் வலியுறுத்துகிறேன், பரிந்துரைக்கப்பட்ட தலைவராக இருக்கக் கூடாது. 24 ஆண்டுகளாக காங்கிரஸின் உள்கட்சி தேர்தல் நடைபெறவில்லை. மாவட்ட தலைவர்கள் கூட தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று நான் கூறுகிறேன். எதிர்வரும் 12 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் மற்றும் மக்களவை தேர்தலுக்கான உறுதியான திட்டத்தை காங்கிரஸ் வைத்திருக்க வேண்டும். கூட்டணிக்காக ஒத்த கருத்துள்ள கட்சிகளை அணுகலாம். ஜெய்ப்பூரில் அடுத்த மாதம் நடைபெற உள்ள கட்சியின் கூட்டத்தில் இந்த விஷயம் விவாதிக்கப்படும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.