மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு மாறுவதற்கு ஒரே வழி மோடியை தோற்கடிக்க வேண்டும்.. பிரித்விராஜ் சவான் வலியுறுத்தல்

 
பிரதமர் மோடி

மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு மாறுவதற்கு ஒரே வழி மோடியை தோற்கடிக்க வேண்டும் என காங்கிரஸின் மூத்த தலைவர் பிரித்விராஜ் சவான் வலியுறுத்தினார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸின் சிந்தன் ஷிவிர் என்னும் ஆலோசனை கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்று முடிவடைந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரித்விராஜ் சவான் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (இ.வி.எம்.) தொடர்பாக நாங்கள் விவாதித்தோம். 

பிரித்விராஜ் சவான்

ஆனால் மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் மனு தாக்கல் செய்வதோ அல்லது வலியுறுத்துவதோ பிரதமர் மோடியை கட்டாயப்படுத்தாது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இதற்கு (வாக்குச்சீட்டு அடிப்படையில் தேர்தல் நடத்த) அவரை தோற்கடிப்பதுதான் ஒரே வழி. நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டு வாக்குச் சீட்டுக்கு வருவோம் என்று எங்களது தேர்தல் அறிக்கையில் எழுத வேண்டும். 

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்

2024 மக்களவை தேர்தலுக்கு முன்பு 12 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தலில் வெற்றி பெறும் வரை மக்களவை தேர்தலை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். கடந்த 2 ஆண்டுகளாக ஒருவரையொருவர் சந்திக்க முடியாததால், இந்த மாநாடு நடத்துவது பெரியது. நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.