பரபரப்பு: தமிழகத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் ஜனாதிபதி ஆட்சி - எச்.ராஜா

 
h

தமிழகத்தில் ஆளுநருக்கும் ஆளுங்கட்சிக்கும் மோதல் உச்சகட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் தமிழகத்தில் முழுமையாக ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வராவிட்டாலும் கூட குறிப்பிட்ட பகுதிகளில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த அரசியலமைப்பு சட்டத்தில் இடம் இருக்கிறது என்கிறார் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா.

தமிழக சட்டசபையில் இதுவரைக்கும் இல்லாத நிகழ்வாக நிகழ்வு ஒன்று நேற்று நடந்தது.  அரசு தயாரித்து அளித்த உரையை முழுமையாக படிப்பதை தவிர்த்தார் ஆளுநர்.  அவர் ஆட்சேபம் தெரிவித்த கருத்துக்களை உரையிலிருந்து அரசு நீக்க மறுத்ததால் இப்படி அதிரடி காட்டினார் ஆளுநர் .  இதனால் அதிர்ச்சி அடைந்த முதல்வர் ஸ்டாலின் சபை விதிகளை தளர்த்திக் கொண்டு ஆளுநருக்கு எதிராக அவசர தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.  இதனால் ஆத்திரமடைந்த ஆளுநர் கூட்டம் முடிவதற்கு முன்பாகவே சபையில் இருந்து வேகமாக வெளியேறி விட்டார்.

ra

 திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் விசிக, கம்யூனிஸ்டுகள், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி எம்எல்ஏக்கள் எழுந்து நின்று ஆளுநருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.   ஆளுநர் வெளிநடப்பு செய்த போது திமுக எம்எல்ஏக்கள் ‘வெளியே போ’ என்று கூச்சலிட்டார்கள்.

சமூக நீதி, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை , மத நல்லிணக்கம்,  திராவிட மாடல் ,தந்தை பெரியார் , பேரறிஞர் அண்ணா , முத்தமிழ் அறிஞர் கலைஞர் இந்த வார்த்தைகளை படிக்க மறுக்கும் ஆளுநர் எங்களுக்கு தேவையில்லை என்று திமுகவின் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில்,   சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் கீழடியில் 18 சித்தர்கள் திருக்கோயில் கட்டப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.  யாகசாலை பூஜையில் பங்கேற்ற எச்.  ராஜா பின்னர் செய்தியாளர்களுடன் பேசியபோது,  தமிழகத்திற்கு ராணுவம் வர யாருடைய அனுமதியும் தேவையில்லை.  தமிழகத்தில் முழுமையாக ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டியதும் இல்லை.  குறிப்பிட்ட பகுதியில் மட்டும் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வரலாம் என்று பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார்.

 அவர் மேலும்,  தனித்தமிழ்நாடு குறித்து ஏற்கனவே பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஒரு தேச துரோகி.   வரம்பு மீறி பேசினால் பின்விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும்.    தேசிய பாதுகாப்பு சட்டத்தில் திருமாவளவனை முதல்வர் கைது செய்ய வேண்டும் என்றார்.

 சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தது குறித்த விவகாரத்தில்,  சட்டசபையில் ஆளுநர் தேசிய கீதம் பாடும்போது அந்த இடத்திலேயே இல்லை. அதற்கு முன்னரே கிளம்பி சென்று விட்டார்.  அதனால் அவர் தேசிய கீதத்தை மதிப்பது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பாடம் நடத்த வேண்டியதில்லை என்றும் ஆவேசத்துடன் கூறினார்.