தேமுதிகவிலும் ஒருநாள் இணைவார்.. அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சித்த பிரேமலதா..
‘அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் சென்றுவிட்டார். இன்னும் அவர் இணையாத ஒரே கட்சி தேமுதிக மட்டும்தான்’என பிரேமலதா விமர்சித்துள்ள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி நெருங்கியுள்ளதையொட்டி, அனைத்துக் கட்சிகளும் தீரிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுகவினர் வேட்பாளர்களை மிரட்டி வெற்றி பெற்றுவிடலாம் என நினைப்பதாகவும், தேமுதிக ஒரு பனங்காட்டு நரி.. எந்த சலசலப்புக்கும் அஞ்சாது என கூறினார்.
கருர் மாவட்டத்தில் உள்ள அமைச்சர் ( செந்தில் பாலாஜி ) தமிழகத்தில் உள்ள அனைதுக் கட்சிகளுக்கும் சென்று விட்டு தற்போது திமுகவில் ஐக்கியமாகியிருப்பதாக கூறிய பிரேமலதா, இன்னும் அவர் இணையாத கட்சி தேமுதிக மட்டும் தான் என்றும் ஒருநாள் தேமுதிகவிலும் இணைவார் என நினைக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
கரூரில் காவல்துறையினர் ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது, கொடிகள் கட்டக்கூடாது என தேமுதிகவுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டினார். ஆனால் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் செந்தில் பாலாஜிக்கு மட்டும் பல இடங்களில் ஒலிபெருக்கிகள், கொடிகள் கட்டப்பட்டு விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது, காவல்துறை கண்களுக்கு தெரியவில்லையா என்று கேள்வியெழுப்பினார். கரூர் மாநகராட்சியாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கரூர் நகரத்திற்கு புதிய பேருந்து நிலையம் அமைத்துத்தர தேமுதிக குரல் கொடுக்கும் என பிரேமலதா வாக்குறுதி அளித்தார்.