பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. பா.ஜ.க.வினர் ராமர் பக்தர்கள் அல்ல, ராவணன் பக்தர்கள்... காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாக்கு

 
பெட்ரோல் பம்ப்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறிப்பிட்டு, பா.ஜ.க.வினர் ராமர் பக்தர்கள் அல்ல, ராவணன் பக்தர்கள் என ராஜஸ்தான் அமைச்சர் பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் தெரிவித்தார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 22ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. குறிப்பாக கடந்த சில தினங்களாக பெட்ரோல்  மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டது. நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 80 காசுகளும், டீசல் லிட்டருக்கு 70 காசுகளும் உயர்த்தப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

காங்கிரஸ்
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு தொடர்பாக ராஜஸ்தான் உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர்  பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையை பா.ஜ.க. உயர்த்தியது. காஷ்மீர் பைல்ஸ் படத்துக்கு எப்படி (பா.ஜ.க.)  அமைச்சர்கள் பட டிக்கெட் விநியோகிக்கிறார்களோ, அதேபோல் பெட்ரோல், டீசலுக்கான கூப்பன்களையும் விநியோக்க வேண்டும்.

பிரதாப் சிங் கச்சாரியாவாஸ்

பகவான் ராமரின் கொள்கைகளை அவர்கள் பின்பற்றவில்லை. ராவணனின் கொள்கைகளை பின்பற்றுகிறார்கள். ராவணன் ஒரு ஏமாற்றுக்காரன், ஆனால் ராமர் யாரையும் ஏமாற்றவில்லை. ராமர் எந்தவொரு பாரபட்சமும் இல்லாமல் அனைவரையும் நடத்தினார். பா.ஜ.க.வினர்  ராமர் பக்தர்கள் அல்ல, ராவணன் பக்தர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.