பீகாரில் ஒராண்டுக்குள் இதை செய்யுங்க.. கூட்டணிக்கு வர்றேன்.. நிதிஷ் குமாரிடம் நிபந்தனை விதித்த பிரசாந்த் கிஷோர்

 
பிரசாந்த் கிஷோர்

பீகாரில் ஒராண்டில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை முதல்வர் நிதிஷ் குமார் வழங்கினால் மட்டுமே பீகாரில் அவருடன் அல்லது கூட்டணியில் சேருவது குறித்து நான் யோசிப்பேன் என  பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

பீகாரில் நிதிஷ் குமார் கடந்த மாதம் பா.ஜ.க.வுடான கூட்டணியை முறித்து கொண்டு, காங்கிரஸ்  மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கைகோர்த்து அம்மாநிலத்தில் 10வது முறையாக ஆட்சி அமைத்தார். இதனை பிரபல தேர்தல் நிபுணரான பிரசாந்த் கிஷோர் கிண்டல் செய்தார். மேலும் நிதிஷ் குமாரின் பதவிக்காலம் குறித்து கருத்துக்கோரும் ஒரு ஆன்லைன் வாக்கெடுப்பையும் தொடங்கினார். இது நிதிஷ் குமாருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. 

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம் வீசி தாக்கிய நபர்கள்… பிரச்சார கூட்டத்தில் பரபரப்பு

பிரசாந்த் கிஷோரின் கருத்து குறித்து நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம், பீகாரில் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யட்டும், அவரது (பிரசாந்த் கிஷோர்) கூற்றுகளில் எந்த அர்த்தமும் இல்லை. 2005 முதல் மாநிலத்தில் என்ன செய்யப்பட்டுள்ளது என்பதற்கான ஏபிசி  அவருக்கு தெரியுமா?. இவர்களுக்கு விளம்பரம் எடுக்கவும்,அறிக்கை விடவும் தெரியும். அவர்கள் இதில் வல்லுனர்கள்,இதையெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இப்படி யாராவது  பேசினால்,  புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள், அவர் மனதில் ஏதோ இருக்க வேண்டும். அது பா.ஜ.க.வுடன் இருந்து கொண்டு, பா.ஜ.க.வுக்கு மறைமுகமாக உதவுவதற்காக இருக்கலாம் என தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு

இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் பேட்டி ஒன்றில், நிதிஷ் ஜி என் மீது கோபமாக இல்லை, அது அவர் பேசும் விதம். அவருடன் எனக்கு நல்லுறவு உள்ளது. நிதிஷ் குமார் யாரையாவது பா.ஜ.க.வின் பி டீம் என்று அழைத்தால் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் ஒரு மாதத்துக்கு முன்பு அவர் பா.ஜ.க.வின் கூட்டாளியாக இருந்தார் என தெரிவித்தார். இந்த  சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பிரசாந்த் கிஷோர், நிதிஷ் குமாரை  அவரது இல்லத்தில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. இதனை பிரசாந்த் கிஷோர் உறுதி செய்துள்ளார். இது குறித்து பிரசாந்த் கிஷோர் கூறுகையில், கடந்த சில தினங்களுக்கு முன் நிதிஷ் குமாரை சந்தித்தேன். பீகாரில் ஒராண்டில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை முதல்வர் நிதிஷ் குமார் வழங்கினால் மட்டுமே பீகாரில் அவருடன் அல்லது கூட்டணியில் சேருவது குறித்து நான் யோசிப்பேன் என  தெரிவித்தார்.