பிரசாந்த் கிஷோர் சேராதது அவருக்கும் நல்லது கட்சிக்கும் நல்லது -திருநாவுக்கரசு எம்.பி.
அடுத்து வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் எதிர்க்கட்சிக்கு பலம் அதிகம் தேவை. அதற்கு நிறைய வேலைகள் செய்ய வேண்டும் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவதாக இருந்தார். இதற்காக பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தன.
பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் முக்கிய பதவியை எதிர்பார்த்ததாக தெரிகிறது. காங்கிரஸ் தலைமை கொடுத்த பதவியை ஏற்றுக்கொள்ள பிரசாந்த் கிஷோருக்கு விருப்பமில்லை. இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைவது இல்லை என்றாகி விட்டது. அதே நேரம் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூக அமைப்பாளராக இருப்பாரா என்ற பேச்சு இருந்தது. அதுவும் தற்போது இல்லை என்றாகி விட்டது.
இதை அடுத்து பிரசாந்த் கிஷோர் தனிக்கட்சி ஆரம்பிக்க போவதாக தகவல் பரவுகிறது. அதற்கேற்றார் போல் அவரும் பாதயாத்திரை தொடங்கி மக்களை சந்தித்து மக்கள் நலத்திட்டங்களை செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார். அவர் காங்கிரஸ் கட்சி பலம் இழந்து இருக்கிறது. பாஜகவின் ஆதிக்கம் இன்னும் 30 ஆண்டுகளுக்கும் இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்.
இதற்கு எம்பி திருநாவுக்கரசு பதிலளித்து இருக்கிறார். 30 ஆண்டுகளுக்கு பாஜகவின் ஆதிக்கம் இருக்கும் என்று சொல்லுகிறார் பிரசாந்த் கிஷோர். அவர் ஒன்றும் மந்திரவாதி கிடையாது. அவர் காங்கிரஸில் இணையாமல் இருப்பது அவருக்கும் நல்லது. கட்சிக்கும் நல்லது என்றார்.
தொடர்ந்து அது குறித்து திருநாவுக்கரசு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றியை பெரும். நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்றார்.
எந்த ஒரு அரசும் சாம்ராஜ்யமும், நிலையாக தொடர்ந்து இருந்ததில்லை. ராஜபக்சே சகோதரர்களை இலங்கை மக்கள் கொண்டாடினார்கள். இன்றைக்கு அந்த மக்களுக்கு பயந்து ராஜபக்சே ஓடிக் கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்டார்.