காங்கிரஸில் இந்து என்ற வார்த்தையை வெறுக்கும் சில தலைவர்கள் உள்ளனர்.. பிரமோத் கிருஷ்ணம்
காங்கிரஸில் இந்து, மதம் என்ற வார்த்தையை வெறுக்கும் சில தலைவர்கள் உள்ளனர் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரமோத் கிருஷ்ணம் தெரிவித்தார்.
ஜூன் 10ம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை கடந்த சில தினங்களுக்கு முன் அந்த கட்சி அறிவித்தது. ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், அஜய் மாக்கன், ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டோரின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதேசமயம், குலாம் நபி ஆசாத், தாரிக் அன்வர் போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. மேலும், சொந்த மாநிலங்களிலிருந்து வேட்பாளரை தேர்ந்தெடுக்காமல் வெளி நபர்களை தேர்ந்தெடுத்ததும் காங்கிரஸ் கட்சிக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
உதாரணமாக மகாராஷ்டிரா மாநிலங்களவை இடத்துக்கு வேறு மாநிலத்தை சேர்ந்த நபரை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்துள்ளது. இதனையடுத்து காங்கிரஸை சேர்ந்த பல தலைவர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். மேலும் சில கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரமோத் கிருஷ்ணம் கூறியதாவது: காங்கிரஸில் இந்து, மதம் என்ற வார்த்தையை வெறுக்கும் சில தலைவர்கள் உள்ளனர். அவர்கள் அந்த வார்த்தையை வெறுத்தால், அவர்கள் எப்படி ஒரு இந்து நபரை ராஜ்யசபா (தேர்தல்) அனுப்ப முடியும். ஆனால் நான் இன்னும் காங்கிரஸூடன் நிற்கிறேன். சிலருக்கு புகார்கள் உள்ளன. மாநிலங்களவை நமது ஜனநாயகத்தின் கோயில்.
எனவே அறிவுஜீவிகள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள் அங்கு அனுப்பப்படுகிறார்கள், அவர்கள் நாட்டுக்காக உழைத்து கட்சியை பலப்படுத்துகிறார்கள். ஆனால் முடிவுகள் (மாநிலங்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்) வருத்தமளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பஞ்சாப் காங்கிரஸ் மக்களவை எம்.பி. மணிஷ் திவாரி கூறுகையில், குலாம் நபி ஆசாத், தாரிக் அன்வர், சல்மான் குர்ஷீத் மற்றும் ரஷீத் அல்வி ஆகியோர் ஸ்தாபிக்கப்பட்டவர்கள் மற்றும் நன்கு அறியப்பட்ட தலைவர்கள், அவர்கள் மதிக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்தார்.