பா.ஜ.க. கோயில்களில் வாக்குகளை தேடுகிறது, நாங்கள் சிவலிங்கத்தில் கடவுளை தேடுகிறோம்... காங்கிரஸ் மூத்த தலைவர்
பா.ஜ.க. கோயில்களில் வாக்குகளை தேடுகிறது, நாங்கள் சிவலிங்கத்தில் கடவுளை தேடுகிறோம் என உத்தர பிரதேச காங்கிரஸின் மூத்த தலைவர் பிரமோத் கிருஷ்ணம் தெரிவித்தார்.
உத்தர பிரதேச காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரமோத் கிருஷ்ணம் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: எங்கள் கட்சி சர்வதர்ம் சம்பவ் சித்தாந்தத்தில் செயல்படுகிறது. நாங்கள் மகாத்மா காந்தியை பின்பற்றுபவர்கள். நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றுவோம். எனக்கு முழு தேசமும் ஒரு கோயில், பா.ஜ.க. கோயில்களில் வாக்குகளை தேடுகிறது, நாங்கள் சிவலிங்கத்தில் கடவுளை தேடுகிறோம்.
சிவ லிங்கத்தை கேலி செய்வதன் மூலம் தங்களை மிகவும் தாராளவாதிகளாக காட்டிக் கொள்ள முயற்சிக்கின்றனர். சிவ லிங்கம் என்பது நம்பிக்கை. எங்கள் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தன்னை சிவ பக்தர் என்று கூறியுள்ளார். சனாதன தர்மம் அனைத்து தர்மங்களையும் மதிக்க கற்றுக்கொடுக்கிறது. ஆனால் நமது சொந்த மதத்தை அவமதிக்க அனுமதி வழங்கவில்லை.
சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகட்டும் அல்லது ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டாகட்டும் சிவ லிங்கத்தை தமாஷா என்று கூற முடியாது. இது நம்பிக்கை சார்ந்த விஷயம். துரதிர்ஷ்டவசமாக எங்கள் கட்சியின் சில தலைவர்கள் தங்களை மிகவும் தாராளவாதிகளாக காட்டிக் கொள்ளும் முயற்சியில் சிவ லிங்கத்தை கேலி செய்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.