அந்த காங்கிரஸூம், இந்த காங்கிரஸூம் ஒன்றல்ல, இப்போது இருப்பது டூப்ளிகேட் காங்கிரஸ்.. பா.ஜ.க. அமைச்சர் தாக்கு

 
சாவர்க்கர் படம்

அந்த காங்கிரஸூம், இந்த காங்கிரஸூம் ஒன்றல்ல, இப்போது நம்மிடம் இருப்பது டூப்ளிகேட் காங்கிரஸ் என்று மத்திய பா.ஜ.க. அமைச்சர் பிரகலாத் ஜோஷி தாக்கி பேசியுள்ளார்.


கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று கர்நாடக சட்டப்பேரவையின் அரங்கில் சபாநாயகர் நாற்காலிக்கு பின்புறம் உள்ள சுவரில் சாவர்க்கர் உள்பட 6 தலைவர்களின்  படங்களை அரசாங்கம் வைத்தது. மகாத்மா காந்தியுடன் சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரின் படம் வைக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் சட்டப்பேரவை வெளியே சித்தராமையாக தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சித்தராமையா

சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சித்தராமையா கூறுகையில், இது போராட்டம் அல்ல. அனைத்து தேசிய தலைவர்கள் மற்றும் சமூக சீர்த்திருத்தவாதிகள் உருவப்படங்களை (அவையில்) வைக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. வீா் சாவர்க்கரின் உருவப்படத்தை சட்டப்பேரவையில் வைக்க சபாநாயகர் ஒரு தலைப்பட்சமாக முடிவெடுத்துள்ளார். யாருடைய உருவப்படத்தையும் வைப்பதை நான் எதிர்க்கவில்லை. சட்டம் ஒழுங்கு போன்ற உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே அரசு விரும்புகிறது. என தெரிவித்தார். 

பிரகலாத் ஜோஷி
காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான பிரகலாத் ஜோஷி கூறுகையில், சித்தாந்த வேறுபாடுகள் இருக்க வேண்டும். ஆனால் சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். பின்னர் தாவூத் இப்ராஹிமின் படத்தையா வைக்க வேண்டும் என்று சித்தராமையாவிடம் கேளுங்கள். காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியல் செய்கிறது. அவர்கள் சுதந்திர போராட்டத்தில் அவர்களின் பங்கு மற்றும் அவர்களின் தியாகங்களை பற்றி பேசுகிறார்கள். ஆனால் அந்த காங்கிரஸூம், இந்த காங்கிரஸூம் ஒன்றல்ல, இப்போது நம்மிடம் இருப்பது டூப்ளிகேட் காங்கிரஸ் என தெரிவித்தார்.