”ஊரை ஏமாற்றி மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருக்கும் சி.விசண்முகம்” பொன்முடி விளாசல்
அமைச்சர் உதயநிதி பற்றி பேச அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு தகுதி இல்லை என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அடுத்த அத்தியூர் திருவாதி கிராமத்தில் முன்னாள் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நினைவு நூற்றாண்டு விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று மாலை மாவட்ட செயலாளரும் விக்கிவரவாண்டி எம்.எல்.ஏ புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. இதில், உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் விழுப்புரம் எம்.எல்.ஏ டாக்டர் ஆர்.லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, “திமுக அரசியலில் ஈடுபாடு கொண்ட வாரிசுகள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை. ஆனால், தந்தையைப் பின்பற்றி அரசியலுக்கு வந்த சி.வி.சண்முகம், திமுகவைப் பற்றியோ அல்லது வாரிசு அரசியலைப் பற்றியோ பேசுவதற்கு எந்தத் தகுதியும் கிடையாது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என் கால் தூசுக்கு சமம் என்று அரசியல் நாகரீகம் இல்லாமல் பேசும் சி.வி.சண்முகம், விரைவில் திமுகவிற்கு தக்க பதில் சொல்லியே ஆக வேண்டும்.திமுகவை குறைகூறுவதை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். ஊரை ஏமாற்றி மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருக்கும் சி.விசண்முகம், தன்னுடன் இருந்த லட்சுமணனை கூட ஒன்றாக வைத்திருக்கத் தெரியாத நபர்தான். சி.வி.சண்முகம் தரங்கெட்டு பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். தவறினால் நாங்களும் தரங்கெட்டு பேசினால், நீங்க தாங்க மாட்டீங்கள். நண்பராக இருந்தாலும் நாகரீகமாக பேச வேண்டும்” என தெரிவித்தார்.