திமுக கூட்டணியில் சேரும் பாமக! ரகசிய பேச்சுவார்த்தை

 
rs

திமுக கூட்டணியில் சேர காங்கிரஸ் தலைவர்கள் மூலமாக பாமக ரகசிய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல். 

 அதிமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள  குழப்பத்தாலும் கட்சியின் தலைவராக அன்புமணி பதவியேற்ற பின் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதாலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனக்கு செல்வாக்கு கிடைக்க வேண்டும்  என்று நினைக்கிறாராம் அன்புமணி.  அதனால்தான் அதிமுக அணியில் இருந்து பிரிந்து, வெற்றி கூட்டணி என்று திமுக கூட்டணியில்  சேர இந்த ரகசிய பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

ss

 வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களில் உள்ளன.  இப்போதே அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்த ஆரம்பித்து விட்டன. 2021 இல் நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அதிமுகவிடம்  இருந்து விலகியே இருக்கிறது பாமக.    திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வர் ஆனதிலிருந்து பாமகவின் முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வந்தார்கள்.  ராமதாஸ், அன்புமணி இருவரும் அவ்வப்போது திமுக அரசினையும் ஸ்டாலினையும் பாராட்டி பேசி வருகிறார்கள். 

இந்த நிலையில் பாமகவின் தலைவராக பதவி ஏற்று இருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.  அவர் சந்திக்கும் முதல் தேர்தல்  வரும் நாடாளுமன்ற தேர்தல் என்பதால் இதில் வெற்றி கூட்டணி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து திமுக அணியில் சேர ரகசிய பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.  முன்னாள் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணு பிரசாத் அன்புமணியின் மைத்துனர் . 

v

காங்கிரஸ் பிரமுகரான அவர் நேற்று டெல்லியில் அளித்த விருந்தில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் கொண்டு ராவ் பங்கேற்று உள்ளார்.  அப்போது திமுக கூட்டணியில் பாமகவை இணைப்பது குறித்து பேச்சு நடந்திருக்கிறது.   தினேஷ் குண்டுராவுடன் பேசிய சிலப்பிரசாத்,  அதிமுகவில் குழப்பம் தொடர்ந்து நீடித்து வருவதால் திமுகவின் கை தான் ஓங்கி இருக்கிறது.   இந்த கூட்டணியில் மக்கள் நீதி மையம் போன்ற கட்சிகளை சேர்க்க திமுக முயன்று வருகிறது.  இதனால் காங்கிரசுக்கு கடந்த முறை கிடைத்த தொகுதிகள் மீண்டும் கிடைக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. 

 திமுகவிடம் குறைந்தபட்சம் 10 இடங்களாவது கேட்டு பெற வேண்டும் என்றால் பாமகவை நமது கைக்குள் வைத்திருக்க வேண்டும் .  20 தொகுதிகளில் வன்னியர் சமுதாய ஓட்டுகள் கணிசமாக இருக்கிறது.  அதனால்  திமுகவில் அணியில் பாமகவை சேர்த்து நமது கைக்குள் வைத்துக் கொண்டால் திமுக நாம் கேட்ட தொகுதிகளை கொடுக்கும் என்று விஷ்ணுபிரசாத் சொல்ல,  தினேஷ் குண்டுராவும் அதற்கு சரி என்று சொல்லி இருக்கிறாராம்.

எப்படியும் திமுக கூட்டணியில் இணைந்து விடும் என்று சொல்லும்படி, திமுகவின் மூத்த நிர்வாகிகளும் பாமகவின் வருகையினை விரும்புவதாக தகவல். அண்மையில் நடந்த திமுக எம்பி ஜெகத்ரட்சகன் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற ராமதாஸ் , அன்புமணியுடன் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் நெருக்கம் காட்டி இருக்கிறார்கள்.

வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பாமகவுக்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பதால் அமைச்சர்கள் துரைமுருகன், வேலு, எம். ஆர். கே. பன்னீர்செல்வம்,  பொன்முடி உள்ளிட்டோர்  கூட்டணியில் பாமக வேண்டும் என்று ஸ்டாலினிடம் வலியுறுத்தி இருப்பதாகவும் தகவல்.  ஆக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக இருப்பது என்பது உறுதியாகிறது.