கனவுகளை விற்கும் மக்கள் குஜராத் தேர்தலில் வெற்றியை பெற மாட்டார்கள்... கெஜ்ரிவாலை தாக்கிய அமித் ஷா

 
அமித் ஷா

கனவுகளை விற்கும் மக்கள் (ஆம் ஆத்மி, கெஜ்ரிவால்) குஜராத் தேர்தலில் வெற்றியை பெற மாட்டார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பூபேந்திர படேல் பதவியேற்று முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அமித் ஷா பேசுகையில் கூறியதாவது: பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் மாநிலம் முன்னேற்றம் கண்டுள்ளது. கனவுகளை விற்கும் மக்கள் (ஆம் ஆத்மி, கெஜ்ரிவால்) குஜராத் தேர்தலில் வெற்றியை பெற மாட்டார்கள். 

பூபேந்திர படேல்

குஜராத் மக்களை நான் அறிவேன். கனவுகளை விற்கும் தொழிலில் உள்ளவர்கள் குஜராத்தில் வெற்றி பெற முடியாது. ஏனென்றால் மக்கள் வேலை செய்வதை நம்புபவர்களை மட்டுமே ஆதரிப்பார்கள். அதனால்தான் மக்கள் பா.ஜ.க. பக்கம் இருக்கிறார்கள்.  பா.ஜ.க. அமோக வெற்றியை அடையும் பாதையில் உள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் போது, கலவரங்கள் மற்றும் ஊரடங்கு சட்டம் பொதுவானது, குண்டுவெடிப்புகள் பொதுவானவை. எனவே குஜராத் ஒருபோதும் வளர்ச்சியை முன்னேற்றத்தையும் கண்டதில்லை.

அரவிந்த் கெஜ்ரிவால்

நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசு, கடந்த 20 ஆண்டுகளில் மாநிலத்தில் வளர்ச்சி மற்றும் நலன்புரி சாதனைகளை படைத்துள்ளது. கடந்த ஒராண்டில் குஜராத்தின் இந்த வளர்ச்சி பயணத்துக்கு  பூபேந்திர படேல் ஜி புதிய ஆற்றலையும், வேகத்தையும் கொடுத்துள்ளார். அவரது பதவிக்காலத்தின் ஒரு வருடத்தை நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள். குஜராத் மக்கள் பா.ஜ.க.வுடன் இருக்கிறார்கள் என்பதை  பூபேந்திர பாயிடம் கூற விரும்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உங்கள் தலைமையில் எதிர்வரும்  தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்பதை நான் தெளிவாக காண்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.