கோவாவில் பா.ஜ.கவில் இணைந்த 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்.. இது நடக்கலாம் என்று எங்களுக்கு தெரியும்... பவன் கேரா சமாளிப்பு

 
முதல்வர் பிரமோத் சாவந்த்துடன் பா.ஜ.க.வில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

கோவாவில் பா.ஜ.க.வில் தங்கள் கட்சியை 8 எம்.எல்.ஏ.க்கள் இணைந்ததை, இது நடக்கலாம் என்று எங்களுக்கு தெரியும் என்று காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்தார்.

கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கோவா சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 40 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 11 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். கடந்த மே மாதம் கோவா பா.ஜ.க. பொறுப்பாளர் சி.டி. ரவி பேட்டி ஒன்றில், தற்போது எங்களிடம் 20 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் இது 30ஆக உயரும் என தெரிவித்தார். அது முதல் கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு தாவ போவதாக ஊக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. 

பவன் கேரா

இந்நிலையில் நேற்று, கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான திகம்பர் காமத், மைக்கேல் லோபோ,டெலிலா லோபோ, ராஜேஷ் பால்தேசாய், கேதார் நாயக், சங்கல்ப் அமோன்கர், அலிக்சோ செக்வேரா மற்றும் ருடால்ப் பெர்னாண்டஸ் ஆகிய 8 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர். இதனையடுத்து கோவா சட்டப்பேரவையில் காங்கிரஸின் பலம் 3ஆக குறைந்துள்ளது. மேலும் இது காங்கிரஸூக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

பா.ஜ.க.

தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் காங்கிரஸில் இணைந்தது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கூறியதாவது: இது ஆபரேஷன் சேறு.  இது நடக்கலாம் என்று எங்களுக்கு தெரியும். இதை செய்ய (காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் கட்சிக்கு இழுக்க) மத்திய புலனாய்வு அமைப்புகள், குண்டர்களின் அச்சுறுத்தல்கள், பண மோகம்  என பா.ஜ.க. அனைத்து தந்திரோபாயங்களையும் பயன்படுத்தியது. ஏனெனில் இந்திய ஒற்றுமை பயணத்தால் பா.ஜ.க. கலக்கம் அடைந்துள்ளது.  ராகுல் காந்தியின் தற்போதைய யாத்திரையின் (இந்திய ஒற்றுமை நடைபயணம்) தெரியும் வெற்றியை கண்டு பா.ஜ.க. பயப்படுகிறது. அதனால்தான் அது கோவா நடவடிக்கையை விரைவாக மேற்கொண்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.