பா.ஜ.க.வும் யாத்திரை நடத்துகிறது அவர்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சர் கடிதம் அனுப்பியிருக்கிறாரா?.. காங்கிரஸ் கேள்வி
இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின்போது கோவிட் விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு மத்திய அமைச்சர் கடிதம் எழுதியதற்கு பதிலடியாக, பா.ஜ.க.வும் யாத்திரை மேற்கொண்டுள்ளது. அவர்களுக்கும் இது போன்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் அனுப்பியிருக்கிறாரா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்திய ஒற்றுமைய நடைப்பயணத்தின்போது, கோவிட் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்கும்படி ராகுல் காந்தி மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கடிதம் எழுதினார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அந்த கடிதத்தில், இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் போது கோவிட் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். நடைப்பயணத்தில் பங்கேற்பவர்கள் மாஸ்க் அணிய வேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும். கோவிட் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே நடைப்பயணத்தில் பங்கேற்க வேண்டும்.
கோவிட் நெறிமுறைகளை பின்பற்றுவது சாத்தியமில்லை என்றால், தேசிய நலன் கருதி, பொது சுகாதார அவசர நிலையை கருத்தில் கொண்டு இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, கர்நாடகா, ராஜஸ்தானில் பா.ஜ.க. யாத்திரை மேற்கொள்வதைக் குறிப்பிட்டு அவர்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் அனுப்பியிருக்கிறாரா என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பவன் கேரா செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் பா.ஜ.க. யாத்திரை மேற்கொண்டுள்ளது. அவர்களுக்கும் இது போன்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் அனுப்பியிருக்கிறாரா?. தயவுசெய்து கோவிட் நெறிமுறைகளை அறிவிக்கவும், நாங்கள் அவற்றை பின்பற்றுவோம். ஏன் ராகுல் காந்தி மட்டும், ஏன் காங்கிரஸ் கட்சி மட்டும், ஏன் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு மட்டும்?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.