சாலை, தண்ணீர் பிரச்சினை தீர்க்கக் கோரிக்கை விடுத்த இளைஞரை அறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ... பா.ஜ.க. கண்டனம்

 
காங்கிரஸ் எம்.எல்.ஏ. வெங்கடரமணப்பா

கர்நாடகாவில் தனது கிராமத்தில் சாலை மற்றும் தண்ணீர் பிரச்சினை தீர்க்கும்படி கோரிக்கை விடுத்த இளைஞரின் கன்னத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பாவகடா  சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ. இருப்பவர் காங்கிரஸை சேர்ந்த வெங்கடரமணப்பா. கடந்த புதன்கிழமையன்று பாவகடாவில் உள்ள தாசில்தார் அலுவலகதத்தில் நடந்து கூட்டத்தில் எம்.எல்.ஏ. வெங்கடரமணப்பா கலந்து கொண்டார். கூட்டம் முடிவடைந்த பிறகு  அங்கிருந்து தனது காரை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தும்கூர் மாவட்டம் நாகென்னஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞர் எம்.எல்.ஏ. வெங்கடரமணப்பா அணுகினார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. வெங்கடரமணப்பா இளைஞரை அடிக்கும் காட்சி

காங்கிரஸ் எம்.எல்.ஏ. வெங்கடரமணப்பாவிடம் அந்த இளைஞர், தனது கிராமத்தில் சாலைகள் மோசமான நிலையில் இருப்பதாகவும், தண்ணீர் பிரச்சினையும் தீர்த்து வைக்கும்படியும்  தெரிவித்தார். மேலும் குறைந்தபட்சம் அந்த சாலைகளை நீங்கள் சரி செய்து தருவீர்கள் என்று நம்புவதாக எம்.எல்.ஏ.விடம் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. வெங்கடரமணப்பா,  அந்த இளைஞரின் கன்னத்தில் அறைந்து விட்டார். காங்கிரஸ் எம்.எல்.ஏ. வெங்கடரமணப்பா இளைஞரை கன்னத்தில் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பா.ஜ.க.

இந்த சம்பவத்தை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது. கர்நாடக பா.ஜ.க. தனது டிவிட்டர் பக்கத்தில், கர்நாடகாவில் உள்ள ஒரு இளைஞர் தனது கிராமத்தில் தண்ணீர் பிரச்சினையை தனது தொகுதி எம்.எல்.ஏ.விடம் கேட்க முயன்றார். பிரச்சினையை தீர்ப்பதை மறந்து விட்டு, காங்கிரஸ் எம்.எல்.ஏ. வெங்கடரமணப்பா அந்த இளைஞரை அடித்தார். குடிமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை காங்கிரஸ் இப்படித்தான் தீர்க்கிறது என பதிவு செய்துள்ளது.