பன்னீர்செல்வத்தின் துரோக யுத்தம் - உதயகுமார் ஆவேசம்
பன்னீர்செல்வம் துரோக யுத்தத்தை தொடங்கி இருக்கிறார் என்று ஆவேசத்துடன் சொல்கிறார் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த எட்டயபுரத்தில் அதிமுகவின் 50 ஆவது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் ஆர். பி. உதயகுமார், கடம்பூர் ராஜ் இந்த விழாவில் பங்கேற்றனர். அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசினார்.
அதிமுகவில் தற்போது எழுந்துள்ள பிரச்சனை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ’’பழனிச்சாமி எடுத்த முயற்சியின் காரணமாகத் தான் பன்னீர்செல்வம் கட்சியில் இணைக்கப்பட்டார். துணை முதல்வர் கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. அப்படி இருந்த போதிலும் அவரிடமிருந்து ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கவில்லை’’என்றார்.
தொடர்ந்து அதுகுறித்து பேசிய உதயகுமார், ’’சட்டசபை தேர்தலின் போது கூட தனது தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளில் பன்னீர்செல்வம் பிரச்சாரத்திற்கு போகவே இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்று வரும்போது வழக்கம் போல பன்னீர்செல்வம் மௌன யுத்தத்தினை தொடங்கினார். அதற்குப் பெயர் தர்மயுத்தம் என்று சொல்லுவார். பன்னீர்செல்வம் மௌனமாக தொடங்கும் யுத்தம் தர்மயுத்தம் அல்ல அது துரோக யுத்தம்’’என்றார் ஆவேசமாக.
அவர் மேலும், ‘’சட்டசபை உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ,மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என்று எல்லோரும் பழனிச்சாமி தலைமையில் அணிவகுத்து இருக்கின்றார்கள். இப்போது மீண்டும் துரோக யுத்தத்தை தொடங்கி இருக்கிறார் பன்னீர்செல்வம் . எப்போது எல்லாம் தன் பதவிக்கு ஆபத்து வருகிறதோ அப்போது எல்லாம் கட்சிக்கு ஆபத்து போன்ற மாயத் தோற்றத்தினை உருவாக்குவார் பன்னீர்செல்வம். அதற்காக அவர் போராடுவார். தர்ம யுத்தத்தினை நடத்துவார். அவருடைய யுத்தங்கள் எல்லாம் தோல்வில்தான் முடிந்திருக்கின்றன. வெற்றியை தராது. அதனால் பல வதந்திகளை உருவாக்கி வருகிறார்’’ என்று ஆவேசப்பட்டார்.