"தலையில்லாத வால்களின் ஆட்சி.. எல்லாத்தையும் திருத்தனும்" - யாரை சொல்கிறார் பிடிஆர்?
மதுரை மாநகராட்சி 100 வார்டுகளைக் கொண்டது. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாநகராட்சியாக திகழ்கிறது. இந்த 100 வார்டுகளுக்கும் இன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. காலையிலேயே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். மதியம் 1 மணி நேர நிலவரப்படி 31.29 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும் வாக்குகளைச் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் வாக்கு செலுத்தினார்.
காக்கை பாடினியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஜனநாயகத்திற்கு விரோதமாக ஊழலுக்காக 5 வருடம் ஆட்சியில் நீடித்த அதிமுகவினர், ஜனநாயக மரபுக்கு உட்பட்டு வெற்றி பெற்ற திமுக அரசை முடக்கப்போவதாக சொல்வது உளறுவது போல இருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமே இல்லை. அடிப்படை அறிவு இல்லாமல் முன்வைக்கப்படும் ஒரு வாதம். ஒரே நாடு ஒரே பத்திரப் பதிவு என்கிறார்கள். பத்திரப் பதிவில் மதுரையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருக்கிறது .
கோயில் நிலத்தியிலேயே ஆக்கிரமிப்பு செய்து பதிந்த நிகழ்வுகளும் நடைபெற்றது.அப்படி இருக்கும் போது மதுரையில் பத்திர பதிவிற்கு தகவல் பற்றாக்குறை உள்ளபோது, ஒரே நாடு ஒரே பதிவு என்றால் உதாரணமாக, குஜராத்தில் உள்ளவர்கள் மதுரையில் உள்ள கோயில் நிலத்தை முறைகேடாக பதிவு செய்தால் என்ன செய்வது?” என்றார். அப்போது அவரிடம் பட்ஜெட் குறித்து கேள்வியெழுப்பினார்கள் நிரூபர்கள். அதற்கு பதிலளித்த அவர், "ஒரு பட்ஜெட் என்பது வரக்கூடிய ஆண்டிற்கான இலக்கு. கணக்கை ஒழுங்காக காண்பித்து, இதுதான் தலைமையின் பலன் என்பதை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
தமிழகத்தில் மாண்புமிகு முதல்வர் @mkstalin தலைமையில் நடைபெற்று வரும் நல்லாட்சி உள்ளாட்சியிலும் தொடர வாக்களிக்கும் ஜனநாயக கடமையை நிறைவேற்றியதோடு, சிறந்த தலைமையால் தமிழ்நாடு அடையப்போகும் வளர்ச்சி குறித்தும் மற்றும் பல கேள்விகளுக்கும் செய்தியாளர்களிடம் பதிலளித்தேன். pic.twitter.com/KrNB0E8Vzy
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) February 19, 2022
தலை இல்லாத வால்கள், கால்கள் ஆட்சி நடத்தியதால்தான் தமிழகத்தில் நிதி நிலைமை சரிந்தது. வருவாய் பற்றாக்குறையை இந்த வருடம் திருத்துவோம். வாரம்தோறும் இதற்கான கூட்டம் நடத்தி கோப்புகளை தீவிரமாக ஆய்வு செய்து திருத்திக் கொண்டு வருகிறோம் .அதனை செம்மையாக செய்து முடிப்போம். பெண்களுக்கான ஊக்கத்தொகை கொடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் கட்டளையிட்டால் உடனே செய்வேன். என்றைக்கு அளிக்க சொல்கிறாரோ அன்று ஏற்பாடு செய்ய வேண்டியது எனது கடமை" என்றார்.