ஒரு கட்சியையோ, தனிநபரையோ எதிர்ப்பது நாட்டுக்கு எதிராக மாறக்கூடாது.. எதிர்க்கட்சிகளை மறைமுகமாக சாடிய மோடி
ஒரு கட்சியையோ அல்லது தனிநபரையோ எதிர்ப்பது நாட்டுக்கு எதிராக மாறக்கூடாது என்று எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி மறைமுகமாக சாடினார்.
மறைந்த மூத்த அரசியல்வாதி ஹர்மோகன் சிங் யாதவின் 10வது நினைவு தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகையில், ஒரு கட்சியையோ அல்லது தனி நபரையோ எதிர்ப்பது நாட்டுக்கு எதிராக மாறக்கூடாது என்று எதிர்க்கட்சிகளை மறைமுகமாக தாக்கினார். பிரதமர் மோடி கூறியதாவது: 1971ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் போது, அனைத்து அரசியல் கட்சிகளும் அரசுக்கு ஆதரவாக நின்றன.
ஆனால் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டபோது, அரசியல் சட்டத்தை காப்பாற்ற அனைத்து முக்கிய கட்சிகளும் ஒன்று சேர்ந்தன. ஒரு கட்சியையோ அல்லது தனிநபரையோ எதிர்ப்பது நாட்டுக்கு எதிராக மாறக்கூடாது என்பது ஒவ்வொரு அரசியல் கட்சியினதும் பொறுப்பு. சித்தாந்தங்களுக்கு அதன் சொந்த இடம் உண்டு. ஆனால் முதலில் தேசம், சமூகம் முதலில், தேசம் முதன்மையானது. தேசம் மற்றும் சமூகத்தை விட சித்தாந்தங்கள் மற்றும் அரசியல் நலன்கள் முன் வைக்கப்படும் ஒரு போக்கு உள்ளது.
நம்மை பொறுத்தவரை, சமூகம் என்பது நமது கலாச்சாரம் மற்றும் இயல்பு. இவ்வாறு அவர் தெரிவித்தார். விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. மற்றும் இதர பிரச்சினைகள் குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் நடத்திய அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வரும் வேளையில், பிரதமர் இந்த மாதிரி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.