என்னை யார் மிகவும் அசிங்கமான வார்த்தைகளில் பேசுவார்கள் என்பதில் காங்கிரஸில் போட்டி நிலவுகிறது.. பிரதமர் மோடி

 
மோடி

என்னை யார் மிகவும் அசிங்கமான வார்த்தைகளை பேசுவார்கள் என்பதில் காங்கிரஸ் தலைவர்களிடையே போட்டி நிலவுகிறது என்று பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர்களை தாக்கினார்.

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்டமாக சூரத் உள்ளிட்ட 89 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்ட மற்றும் இறுதிகட்ட தேர்தல் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. இறுதி கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் உள்ள கலோல் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகையில் கூறியதாவது:  

காங்கிரஸ்

மோடியை யார் மிகவும் அசிங்கமான வார்த்தைகளை பேசுவார்கள் என்பதில் காங்கிரஸ் தலைவர்களிடையே போட்டி நிலவுகிறது. ராமர் இருப்பதை நம்பாதவர்கள் இப்போது (அசுர அரசன்) ராவணனை ராமாயணத்திலிருந்து கொண்டு வந்துள்ளனர். எனக்கு எதிராக இப்படிப்பட்ட கசப்பான வார்த்தைகளை பயன்படுத்திய பிறகு  மன்னிப்பு கேட்பதை மறந்து விடுங்கள், அவர்கள் ஒருபோதும் மனந்திருந்தவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  சில நாட்களுக்கு முன் ஒரு காங்கிரஸ் தலைவர் நாய் போல் மோடி சாவார் என்கிறார், மற்றொருவர் ஹிட்லரின் மரணம் போல் மோடிக்கு அமையும் என்கிறார். இன்னொருவர் வாய்ப்பு கிடைத்தால் மோடியை நானே கொன்று விடுவேன் என்கிறார். யாரோ ராவணன் என்கிறார், யாரோ அரக்கன் என்கிறார், யாரோ கரப்பான் பூச்சி என்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மல்லிகார்ஜுன கார்கே

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேசுகையில், மோடி ஜி பிரதமர். அவர் தனது வேலையை மறந்து மாநகராட்சி தேர்தல், எம்.எல்.ஏ. தேர்தல் மற்றும் எம்.பி. தேர்தல் என எல்லா இடங்களிலும் பிரச்சாரம் செய்கிறார். எந்நேரமும் தன்னை பற்றியே பேசிக் கொண்டிருப்பார். வேறு யாரையும் பார்க்க வேண்டாம், மோடியை பார்த்து ஒட்டு போடுங்கள் என்று சொல்கிறார். உங்கள் முகத்தை நாங்கள் எத்தனை முறை பார்க்கிறோம்? உங்களிடம் எத்தனை வடிவங்கள் உள்ளன? உங்களுக்கு ராவணனை போல 100 தலைகள் உள்ளதா? என தெரிவித்தார்.