காங்கிரஸ் என்றால் ஊழலுக்கும் சுயநல அரசியலுக்கும் உத்தரவாதம் என்பது இமாச்சல் மக்களுக்கு தெரியும்.. பிரதமர் மோடி

 
மோடி

காங்கிரஸ் என்றாலம் ஊழலுக்கும் சுயநல அரசியலுக்கும் உத்தரவாதம் என்பது இமாச்சல் மக்களுக்கு தெரியும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இமாச்சல பிரதேசம் சோலனில் விஜய் சங்கல்ப் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி  பேசுகையில் கூறியதாவது: இமாச்சல பிரதேசத்துக்கு ஸ்திரத்தன்மையை அளிக்கும் பா.ஜ.க. அரசு தேவை. டெல்லியில் (மத்தியில்) 30 ஆண்டுகளாக ஸ்திரமற்ற நிலை இருந்தது. தேர்தல்களில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் வீணடிக்கப்படும்போது, அரசுகள் வந்து சென்றன. 2014ல் நிலையான ஆட்சிக்கு மக்கள் வாக்களித்தனர். காங்கிரஸ் ஆட்சியின் போது, நிலையற்ற அரசாங்கங்களில் சுயநலமுள்ள பல்வேறு குழுக்கள் இருந்தன. இத்தகைய சுயநல குழுக்களின் இலக்காக சிறிய மாநிலங்கள் இருந்தன. இந்த குழுக்கள் தங்கள் நலனுக்காக மட்டுமே செயல்பட்டன. காங்கிரஸ் என்றாலம் ஊழலுக்கும் சுயநல அரசியலுக்கும் உத்தரவாதம் என்பது இமாச்சல் மக்களுக்கு தெரியும். காங்கிரஸில் உறுதியற்ற தன்மை, நிச்சயமற்ற தன்மை மற்றும் அராஜகம் இருக்கும்போது பா.ஜ.க.வின் பணியும் உறுதியும் வலுவாக உள்ளது. 

காங்கிரஸ்

உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் போன்ற பல சிறிய மாநிலங்களில் இப்போது நிலையான அரசாங்கங்கள் உள்ளன. இதேபோன்ற ஒரு போக்கு உத்தர பிரதேசத்தில் இப்போது காணப்படுகிறது. அங்கு மக்கள் பாரம்பரியத்தை உடைத்து யோகி அரசாங்கத்தை கொண்டு வந்தனர். ஊழலுக்கு எதிரான தீர்க்கமான போர், மத்தியில் நிலையான அரசு அமைந்தபோது தொடங்கியது. மத்தியில் நிலையான அரசு அமைந்ததும் பயங்கரவாதமும் நக்சலிசமும் கட்டுக்குள் வந்து வடகிழக்கில் அமைதி நிலவியது. தங்களை கடுமையான நேர்மையானவர்கள் என்று அழைத்து கொள்பவர்கள் மிகவும் ஊழல்வாதிகள். சமூகத்தையும் நாட்டின் ஒற்றுமையையும் உடைக்க இவர்கள் சதி செய்கிறார்கள். இத்தகைய சுயநலக் குழுக்களிடமிருந்து இமாச்சல் தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். 

விவசாயிகள்

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி மூலம் இமாச்சல பிரதேச விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் பலன் 9 லட்சம் விவசாயிகளை எட்டியுள்ளது. வெளிநாட்டில் இருந்து யூரியாவை கொண்டு வர வேண்டும். ஒரு மூட்டை  யூரியா விலை ரூ.2 ஆயிரம். ஆனால் நாங்கள் நமது விவசாயிகளுக்கு ரூ.270க்கும் குறைவாக கொடுக்கிறோம்.மீதமுள்ள செலவுகளை எங்கள் அரசாங்கம் ஏற்கிறது. ரூ.100 மானியம் கொடுக்கும் சிலர், அது தொடர்பான விளம்பரம் வெளியிட ரூ.1,000 செலவிடுகின்றனர். நீங்கள் பா.ஜ.க. வேட்பாளரை நினைவுப்படுத்த வேண்டிய அவசியமில்லை, வாக்களிக்க செல்லும்போது தாமரை சின்னத்தை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நான் தாமரையுடன் வந்துள்ளேன். தாமரை சின்னத்தை எங்கு பார்த்தாலும் அது பா.ஜ.க. என்றும், மோடி உங்களிடம் வந்து விட்டார் என்று அர்த்தம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.