தற்போது நிலையான அரசாங்கத்தின் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்... பிரதமர் மோடி

 
மோடி

தற்போது நிலையான அரசாங்கத்தின் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இமாச்சல பிரதேசம் மண்டியில் நடைபெற்ற கூட்டத்தில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றுகையில் கூறியதாவது: பல தசாப்தங்களாக கூட்டணி அரசாங்கங்கள் இருந்தன. அவை செயல்பட முடியுமா இல்லையா என்பது நிச்சயமற்ற சூழ்நிலை. அதன் காரணமாக உலக மக்கள் நாட்டின் மீது சந்தேகம் கொண்டிருந்தனர். 2014ம் ஆண்டில் ஒரு நிலையான அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இது கொள்கை உருவாக்கம் மற்றும் நிர்வாகத்தில் ஸ்திரதன்மையை கொண்டு வந்தது. உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கூட ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாறும். 

பா.ஜ.க.

ஆனால் சமீபத்தில் நடந்த இந்த இரு மாநில சட்டப்பேரவை தேர்தல்களிலும் மக்கள் மீண்டும் பா.ஜ.க. அரசையே தேர்ந்தெடுத்துள்ளனர். தற்போது நிலையான அரசாங்கத்தின் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். இமாச்சல பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ரூ.14 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். மேலும் மாநிலத்தில் ஹட்டி சமூகத்தை எஸ்.டி. பட்டியலில் சேர்க்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளோம். எல்லை பகுதிகளுக்கு அருகே வளரும் கிராமங்களுடன் ரோப்வே வசதியையும் நாங்கள் கொண்டு வந்தோம். இமாச்சல பிரதேசத்தின் சுற்றுலாத் துறை விரிவடையும் விதம் மிகவும் ஊக்கமளிக்கிறது.  

இ விசா

சுற்றுலா பயணிகளுக்கு இ விசா வசதியை தொடங்குவதன் மூலம் கோவிட்-19 தொற்றுநோயின் கட்டுகளிலிருந்து சுற்றுலாவை மீட்டு கொண்டு வர பா.ஜ.க. அரசு முயற்சிகளை மேற்கொண்டது. இமாச்சல பிரதேசத்தின் இளைஞர்கள் விளையாட்டாக இருந்தாலும் சரி, கலையாக இருந்தாலும் சரி மாநில இளைஞர்களின் ஆர்வமும் திறமையும் தேசத்துக்கு பயனளிக்கிறது. இளைஞர்களை ஊக்குவிப்பதே பா.ஜ.க.வின் முன்னுரிமை. மண்டியில் நடைபெறும் கூட்டத்தில் நான் கலந்து கொள்ளவிருந்தேன். ஆனால் மோசமான வானிலை காரணமாக என்னால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. வரும் நாட்களில் கண்டிப்பாாக அங்கு வந்து அங்குள்ள மக்களை சந்திப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.