ஜம்முவை சேர்ந்த யாருக்கும் துணைநிலை கவர்னராக தகுதியில்லையா?.. பா.ஜ.க.வை தாக்கிய மெகபூபா முப்தி

 
பா.ஜ.க.வின் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு இடம் இல்லை…. மெகபூபா முப்தி ஆவேசம்..

ஜம்முவை சேர்ந்த யாருக்கும் துணைநிலை கவர்னராக தகுதியில்லையா? என்று மெகபூபா முப்தி கேள்வி எழுப்பியுள்ளார்.  

2020 ஆகஸ்ட் 7ம் தேதியன்று ஜம்மு அண்ட் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை கவர்னராக பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களின் ஒருவரும், முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சருமான மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டார். ஜம்மு அண்ட் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை கவர்னராக பொறுப்பேற்ற முதல் அரசியல் தலைவர் மனோஜ் சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது.

மனோஜ் சின்ஹா

இந்நிலையில், துணைநிலை கவர்னர் பதவியை குறிப்பிட்டு மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். ஜம்முவை சேர்ந்த யாருக்கும் துணைநிலை கவர்னர் ஆகும் தகுதியில்லையா? என்று மெகபூபா முப்தி கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது ஜம்மு அண்ட் காஷ்மீர் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க.

மெகபூபா முப்தி கூறியதாவது: அவர்கள் (பா.ஜ.க.) ஜம்முவில் இருந்து ஒருவரை முதல்வராக்குவோம் என்று ஜம்மு மக்களிடம் கூறினார்கள். பா.ஜ.க. ஜம்முவில் இருந்து ஒருவரை துணைநிலை கவர்னராக ஆக்கியிருக்கலாம். ஆனால் அவர்கள் அதற்கு பதிலாக  உத்தர பிரதேசத்திலிருந்து ஒருவரை ஜம்மு காஷ்மீரின் துணநிலை கவர்னராக ஆக்கினர்.  ஜம்முவில் இருந்து யாரும் துணைநிலை கவர்னராக தகுதியானவர் இல்லையா?. இவ்வாறு அவர் தெரிவத்தார்.