பொது சிவில் சட்டம் விவகாரம்.. இது ஒரு குழந்தைக்கு கூட தெரியும்.. பா.ஜ.க. மாநில அரசுகளை கிண்டலடித்த ப.சிதம்பரம்

 
ப சிதம்பரம்

பொது சிவில் சட்டத்தை மாநில அரசுகளால் செயல்படுத்த முடியாது ஆனால் நாடாளுமன்றத்தால் செய்ய முடியும் என்பது ஒரு குழந்தைக்கு கூட தெரியும் என்று பா.ஜ.க. மாநில அரசுகளை காங்கிரஸின் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

பா.ஜ.க. நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக உள்ளது. மேலும், பா.ஜ.க. ஆளும் பல மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளன. உதாரணமாக உத்தரகாண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ.க. அரசு, கடந்த மே மாதம், பொது சிவில் சட்ட வரைவை தயாரிக்க ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணர்கள் குழுவை அமைத்தது.

பா.ஜ.க.

முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ.க. அரசு எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக அங்கு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. மேலும், மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஒரு குழுவை அமைத்தது. இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறச் செய்து ஆட்சியில் அமர்த்தினால் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என பா.ஜ.க. வாக்குறுதி அளித்துள்ளது. 

பொது சிவில் சட்டம்

பா.ஜ.க. மாநில அரசுகள் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஆர்வம் காட்டி வருவதை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார். இது  தொடர்பாக ப.சிதம்பரம் கூறுகையில், பொது சிவில் சட்டத்தை மாநில அரசுகளால் செயல்படுத்த முடியாது ஆனால் நாடாளுமன்றத்தால் செய்ய முடியும் என்பது ஒரு குழந்தைக்கு கூட தெரியும் என தெரிவித்தார்.