ராகுல் காந்தி, சோனியா காந்தி ஒரு ரூபாயவது சம்பாதித்துள்ளனர் என்பதை பா.ஜ.க.வால் நிரூபிக்க முடியுமா?.. ப.சிதம்பரம் கேள்வி

 
ப சிதம்பரம்

ஏ.ஜே.எல். வழக்கில் ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் ஒரு ரூபாயவது சம்பாதித்துள்ளனர் என்பதை பா.ஜ.க. செய்தி தொடர்பாளர்களால் நிரூபிக்க முடியுமா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.

நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு விசாரணைக்காக தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் ராகுல் காந்தி ஆஜரானார். அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ராகுல் காந்தியின் ஏ.ஜே.எல். வழக்கில் அமலாக்க இயக்குனரகம் சட்டத்தை பின்பற்றவில்லை. மேலும் இதுவரை ஒருவரை எப்.ஐ.ஆர். கூட பதிவு செய்யப்படாத வழக்கில் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. 

நேஷனல் ஹெரால்டு வழக்கு

அமலாக்கத்துறையினர் சட்டத்தை பின்பற்றவில்லை. ஜனநாயகத்தில் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க தகுதியுடையவர்கள். சட்டத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். அமலாக்த்துறை சட்டத்தை பின்பற்றினால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அமலாக்கத்துறை சட்டத்தை பின்பற்றவில்லை. திட்டமிடப்பட்ட குற்றம் என்ன என்று நாங்கள் கேட்கிறோம்? பதில் இல்லை. எந்த போலீஸ் ஏஜென்சி எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது? பதில் இல்லை. எப்.ஐ.ஆர். நகல் இல்லை. 

பா.ஜ.க.

ஏ.ஜே.எல். வழக்கில் ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் ஒரு ரூபாயவது சம்பாதித்துள்ளனர் என்பதை பா.ஜ.க. செய்தி தொடர்பாளர்களால் நிரூபிக்க முடியுமா?. பா.ஜ.க.வின் கற்றறிந்த செய்தி தொடர்பாளர்கள் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிப்பார்களா?, அமலாக்கத்துறையின் விசாரணையை தூண்டிய பி.எம்.எல்.ஏ.-ன் (பண மோசடி தடுப்பு சட்டம்) கீழ் திட்டமிடப்பட்ட குற்றம் எது? திட்டமிடப்பட்ட குற்றம் தொடர்பாக எந்த போலீஸ் ஏஜென்சி எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.