எங்கள் கை பூப்பறித்துக் கொண்டிருக்காது -வெடித்த ஜெயக்குமார்
வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது. தாக்குதல் நடத்தினால் எங்கள் கைது பூப்பறித்துக் கொண்டிருக்காது என்று வெடித்தார் ஜெயக்குமார்.
ஒற்றைத் தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது . இதனால் அவர்கள் இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் தங்களது இல்லங்களில் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இன்று முன்னாள் அமைச்சர்கள் ஆர். பி. உதயகுமார், சி. விஜயபாஸ்கர் , ஜெயக்குமார் உள்ளிட்டோருடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார் . சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் ஜெயக்குமார் .
அப்போது, ‘’ ஒற்றை தலைமை பற்றி பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டுவருவது குறித்து கட்சி தான் முடிவு செய்யும்’’ என்றார்.
ஓபிஎஸ் -இபிஎஸ் இருவரின் ஆதரவாளர்கள் தலைமை அலுவலகத்தில் இருந்து இருவருக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பி வருகின்றனர். அப்போது இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. பெரம்பூர் பகுதி செயலாளர் மாரிமுத்து தாக்கப்பட்டிருக்கிறார்.
தலைமை அலுவலகத்தில் நேற்று முன் தினம் ஜெயக்குமாரின் கார் தாக்கப்பட்டதும், இன்று ஆதரவாளர் தாக்கப்பட்டதும் குறித்த கேள்விக்கு, ’’பெரம்பூர் பகுதி செயலாளர் மாரிமுத்து தாக்கப்பட்டது கண்டனத்திற்கு உரியது’ என்றார் .நேற்று முன் தினம் ஓ. பன்னீர்செல்வம் வருகிறார் என்று தெரிந்ததும் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனையில் இருந்த சிவி சண்முகம், வளர்மதி, ஜெயக்குமார் அவசரமாக புறப்பட்டு சென்றுவிட்டார்கள். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடியின் கார் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்று செய்தி வந்தது. இதுகுறித்த கேள்விக்கு, ‘’ தொண்டர்கள் என் வாகனத்தை தொட்டார்கள். வாகனத்தை தொட்டவை தாக்குதல் என்கிறார்கள். வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது . தாக்குதல் நடத்தினால் எங்கள் கை பூப்பறித்துக் கொண்டிருக்காது’’என்று வெடித்தார்.
முன்னதாக அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த தீர்மான குழு கூட்டத்தில் பங்கேற்று பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து நடைபெற்ற ஆலோசனைக்கு பின்னர் வெளியே வந்த ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’ ஒற்றை தலைமை கோரிக்கை ரகசியமானது அல்ல. அது அதிமுக தொண்டர்களின் கோரிக்கை. அதைத்தான் நான் வெளியே சொன்னேன். அது குற்றமல்ல, அதற்காக என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது . தொண்டர்களின் மனநிலையைத்தான் உண்மையைத்தான் நான் பிரதிபலித்தேன். என்னிடம் பூச்சாண்டி காட்ட முடியாது நான் பூச்சாண்டி கட்டப்படுவதற்கு பயப்பட மாட்டேன் ’’என்றார்.