"ஓபிஎஸ் அதிமுகவை ஜாதி கட்சியாக கொண்டு செல்ல முயற்சிக்கிறார்"

 
ops

ஓபிஎஸ் அதிமுகவை ஜாதி கட்சியாக கொண்டு செல்ல முயற்சிக்கிறார், எனவே அங்கிருந்து விலகி தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணியில் சேர்ந்து இருப்பதாக அவரது அணியில் இருந்து விலகி வந்தவர்கள் பேட்டியளித்துள்ளார். 

சேலம் நெடுஞ்சாலை நகரில் முகாமிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தற்போது ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் அதிலிருந்து விலகி, இன்று மாலை எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அவரது அணியில் இணைந்தனர். 

மாநில அம்மா பேரவை துணை செயலாளர் மயிலை டி.மாறன், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், செய்தி தொடர்பாளருமான  பொதிகை கே.பி.சாரதி, திருவள்ளூர் மாவட்டம் பூண்டி கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஈ.உத்திரகுமார், திருவள்ளூர் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் டி.ராஜா ஆகியோர் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி  இன்று சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து ,  பூங்கொத்து கொடுத்து  அவருடைய அணியில் இணைந்தனர். 

பின்னர்  அவர்கள் கூறும் போது சசிகலா அவர்களையும்,  தினகரன் அவர்களையும் அதிமுகவில் இணைக்கும்  முயற்சியில் 
ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்.  ஜெயலலிதா அவர்களின் சாவுக்கு காரணமான சசிகலா இணைப்பை நாங்கள் விரும்பவில்லை,  அதனால் அங்கிருந்து விலகி தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் முன்னிலையில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஓபிஎஸ் உடன் இருக்கும் போது எங்களுக்கு உரிய மரியாதை இல்லை,  ஓபிஎஸ் இரண்டு மனநிலையில் உள்ளார். 
ஜேசிடி  பிரபாகரன் ,  வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கூறுவதை மட்டுமே கேட்கிறார். டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை முன்னிறுத்த ஓபிஎஸ் முயற்சித்து வருகிறார்.  இதனால் கட்சி படுபாதாளத்திற்கு செல்லும், மேலும் சின்னத்தை முடக்க ஓபிஎஸ் முயற்சித்து வருகிறார். எனவே அவரிடமிருந்து விலகி வந்து தற்போது எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இணைந்துள்ளோம்.  அடுத்து சென்னையில் 2000-க்கும் மேற்பட்டோருடன் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி  முன்னிலையில் நாங்கள்  இணைய உள்ளோம் என்றார். 

தொடர்ந்து அவர்கள் கூறும் போது அதிமுகவை ஜாதி கட்சியாக ஓபிஎஸ் கொண்டு செல்கிறார். அவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பதவியை வழங்கி வருகிறார். இப்படியே சென்றால் அதிமுக வளராது எனவே தான் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவருடைய அணியில் இணைந்துள்ளோம் என்றனர்.