சிந்தியா, ஜெய் ஷா போன்றவர்களும் அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தான்.. மோடிக்கு பதிலடி கொடுத்த எதிர்க்கட்சிகள்

 
மோடி

வாரிசு அரசியலுக்கு எதிராக பிரதமர் மோடி பேசியதற்கு, சிந்தியா, ஜெய் ஷா போன்றவர்களும் அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தான் என்று எதிர்க்கட்சிகள் பதிலடி கொடுத்துள்ளனர்.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ஊழலும், வாரிசு அரசியலும் தான் இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால்கள். நமது பல நிறுவனங்கள் குடும்ப ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. வாரிசு அரசியல் நமது திறமையையும், நாட்டின் திறன்களையும் பாதிக்கிறது மற்றும் ஊழலுக்கு வழிவகுக்கிறது. நான் சொந்தபந்தங்களுக்கு பதவி கொடுக்கப்படுவது  பற்றி  பேசும்போது, நான் அரசியலை மட்டுமே பேசுகிறேன் என்று மக்கள் நினைக்கிறார்கள், இல்லை, துரதிர்ஷ்டவசமாக அரசியல்துறையில் அந்த தீமை இந்தியாவின் ஒவ்வொரு நிறுவனத்திலும் குடும்பவாதத்தை வளர்த்துள்ளது என்று தெரிவித்தார்.

அல்கா லம்பா

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அல்கா லம்பா டிவிட்டரில், ஒன்றாக, அவர்கள் (பா.ஜ.க.) ஒரு குடும்பத்துக்கு (காந்தி குடும்பம்) எதிராக சண்டையிடுவார்கள். நீங்கள் (மக்கள்) அனைவரும் ஒன்றிணைந்து அந்த ஒரு குடும்பத்துக்கு பலம் கொடுங்கள். அதனால் 130 கோடி குடும்பங்களுக்காக பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தை தங்கள் முழு பலத்துடன் எதிர்த்துப் போராடுவார்கள். இறுதியில் 130 கோடி குடும்ப உறுப்பினர்கள் வெற்றி பெறுவது உறுதி என பதிவு செய்து இருந்தார்.

ஜெய் ஷா

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் கூறுகையில், பா.ஜ.க.வில் ஜோதிராதித்ய சிந்தியா போன்ற அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த தலைவர்கள் உள்ளனர். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் ஒரு எம்.எல்.ஏ.. உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா சக்தி வாய்ந்த பதவியில் உள்ளார்.