திரௌபதி முர்மு சந்திப்புக்காக சட்டப்பேரவையை ஒத்திவைத்த சபாநாயகர்.. இது ஜனநாயகத்தின் கொலை - காங்கிரஸ் தாக்கு

 
காங்கிரஸ்

குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க.வின் வேட்பாளர் திரௌபதி முர்முவை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பதற்காக கோவா சட்டப்பேரவையை சபாநாயகர் சிறிது நேரம் ஒத்திவைத்ததை ஜனநாயகத்தின் கொலை என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விமர்சனம் செய்தனர். 

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதி முடிவடைகிறது. இதனையடுத்து வரும் ஜூலை 18ம் தேதியன்று குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு நேற்று காலை கோவா சென்று பா.ஜ.க. மற்றும் கூட்டணி மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

கோவா எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டிய திரௌபதி முர்மு

திரௌபதி முர்மு உடனான சந்திப்பில் கோவாவின் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 20 பேர், எம்.ஜி.பி. எம்.எல்.ஏ.க்கள் 2 பேர், பா.ஜ.க.வை ஆதரிக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் மற்றும் எம்.பி.க்கள் நாயக் மற்றும் டெண்டுல்கர் ஆகியோர் பங்கேற்றனர். இதற்கிடையே குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளர் திரௌபதி முர்மு மாநிலத்தில் இருப்பதாக கூறி, அவையை பிற்பகல் 2.30 மணி வரை அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் தவாட்கர் ஒத்திவைத்தார். இதனை ஜனநாயகத்தின் கொலை என எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் விமர்சனம் செய்துள்ளது.

ரமேஷ் தவாட்கர்

கோவா சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி துணை தலைவர் சங்கல்ப் அமோன்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திரௌபதி முர்மு குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் மட்டுமே. அவர் இந்திய குடியரசு தலைவர் அல்ல, அவரது கூட்டத்திற்காக அவை ஒத்திவைக்கபட வேண்டுமா என கேள்வி எழுப்பினார்.