"ஜீரோ பட்ஜெட்.. மோடினாமிக்ஸில் மிடில் கிளாஸ், ஏழைகளுக்கு ஒன்னுமே இல்ல" - எதிர்க்கட்சிகளின் ரியாக்சன் என்ன?

 
ராகுல் காந்தி

2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்திருக்கிறார். அவர் தாக்கல் செய்யும் நான்காவது பட்ஜெட் இது. கொரோனா பரவல் காரணமாக தொடந்து இரண்டாம் ஆண்டாக டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். குறிப்பாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட டேப்லட் மூலம் உரை நிகழ்த்தினார். இதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த பட்ஜெட் உரை மீதான எதிர்க்கட்சிகளின் ரியாக்சன் என்ன என்பதைப் பார்க்கலாம். இதனை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி "ஜீரோ பட்ஜெட்" என விமர்சித்துள்ளார்.

Budget 2019 political reactions: Modi, Shah call Budget reform-oriented;  Opposition terms it directionless, says 'no focus on job creation'-Business  News , Firstpost

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மோடி அரசின் ஜீரோ பட்ஜெட் இது.  மாத சம்பளம் வாங்குபவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், சிறு குறு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆகியோருக்கு பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை” என்று பதிவிட்டுள்ளார். மாத சம்பளம் வாங்குபவர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இது நடுத்தர வர்க்கத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரியும் குறைக்கப்பட்டுள்ளது.


இதுதவிர எளிய மக்கள் பயன்படுத்தும் எந்த பொருட்கள் மீதும் வரிக்குறைப்பு இல்லை. இதை மனதில் வைத்தே ராகுல் காந்தி ஜீரோ பட்ஜெட் என சொல்லியிருக்கிறார். பொருளாதார ஆய்வறிக்கையும் ஆக்ஸ்ஃபாம் அறிக்கையும்  ஒப்பிட்டு காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. ஆக்ஸ்ஃபாம் ஆய்வறிக்கையில் 2021ஆம் ஆண்டின் நிலவரப்படி இந்தியாவில் 84% மக்களின் வருமானம் குறைந்துள்ளது. ஆனால் மத்திய அரசின் 2020ஆம் ஆண்டில் 64.9% அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனை ஒப்பிட்டுள்ள காங்கிரஸ், "ஒருபுறம் அரசுக்கு வருமானம், மறுபுறம் மக்களுக்கு வருமான இழப்பு. இது தான் மோடினாமிக்ஸ்” என தெரிவித்துள்ளது.


திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. டெரக் ஓ பிரையன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த அரசாங்கத்திற்கு வைரங்கள் தான் சிறந்த நண்பர்கள். விவசாயிகள், நடுத்தர மக்கள், தினக் கூலிகள், வேலை இல்லாதோர் பற்றி பிரதமருக்குக் கவலையில்லை” என குறிப்பிட்டுள்ளார். பட்டை தீட்டப்பட்ட வைரங்களுக்கான வரியை மத்திய அரசு குறைத்துள்ளதை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார். அதேபோல சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி, "இந்த பட்ஜெட் யாருக்காக? இந்தியாவின் பெரும்பணக்காரர்களான 10% பேரிடம் நாட்டின் சொத்தில் 75% உள்ளது. ஆனால் அடித்தட்டில் உள்ள 60% மக்களிடம் 5% சொத்து கூட இல்லை. 


பெருந்தொற்று காலத்தில் கூட அதீத லாபம் பெற்ற கார்ப்பரேட்களுக்கு ஏன் கூடுதல் வரி விதிக்கவில்லை?" என்று கேள்வியெழுப்பியுள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி ட்விட்டரில், "வேலையின்மை மற்றும் பணவீக்கத்தால் நசுக்கப்படும் வேளையில் சாதாரண பொது மக்களுக்கு பட்ஜெட்டில் பூஜ்ய அறிவிப்பு தான் உள்ளது. எதையுமே குறிக்காத பெரிய வார்த்தைகளில் மத்திய அரசு தோற்றுவிட்டது. பெகாசஸ் விவகாரத்தை மூடிமறைக்க கொண்டுவரப்பட்ட பட்ஜெட்” என விமர்சித்துள்ளார். இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.