மீண்டும் தர்ம யுத்தம் எதற்காக? ஓபிஎஸ் விளக்கம்
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் தலைமையில் 200க்கும் நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து சென்னை வேப்பேரியில் நடந்த விழாவில் அதிமுகவில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவுபெற்று இருக்கிறது. எம்.ஜி.ஆர் அதிமுகவை 50 ஆண்டுகளுக்கு முன்பு தொண்டர்களுக்காக தொடங்கினார். பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கொண்டு வந்தார். அவருக்கு பின்னர் வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சமூக பாதுகாப்போடு வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு, பல்வேறு திட்டங்களை ஆட்சியில் இருக்கும் போது அறிவித்தார். எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் ஆட்ட முடியாத நிலையில் அதிமுகவை ஜெயலலிதா வளர்த்து எடுத்தார்.
எம்.ஜி.ஆர். கட்சியை தொடங்கிய போது, கட்சி எப்படி தொண்டர்களுக்காக இருக்க வேண்டும் என கருதி பல்வேறு சட்ட விதிகளை உருவாக்கினார். அதையே ஜெயலலிதாவும் பின்பற்றினார். ஆனால் இன்று நிலைமை மாறி விட்டது. அசாத்தியமான சூழல் இன்று நம்மை சுற்றி இருக்கிறது. அதை மாற்றி கட்சியை காக்க வேண்டியது, ஒவ்வொரு தொண்டர்களின் விருப்பம்.
தொண்டர்கள் எண்ணவோட்டத்தில் கட்சி செயல்பட வேண்டும் என்பதற்காக தான் ஒவ்வொரு தொண்டனும் வாக்களித்து, பொது செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்ற விதியை உருவாக்கினார். அடிப்படை உறுப்பினர் நினைத்தால் மட்டுமே தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டு இருந்த எம்.ஜி.ஆரின் நோக்கத்திற்கு மாறாக இன்று சூழல் நிலவுகிறது. ஆனால் இன்று சட்ட விதிகளை மாற்றி, 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என்றும், 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும் என்று திருத்தி இருக்கிறார்கள்.
இதன் மூலம் வலிமையான நபர்கள் மட்டுமே தலைமைக்கு வர வேண்டும் என சிலர் இப்படி செய்கிறார்கள். பொதுக்குழு என்ற பெயரில் நடந்த கூட்டத்தில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்தார்கள். இதை எந்தவொரு அதிமுக தொண்டனாலும் ஏற்று கொள்ள முடியாது. அதற்கு எதிராக தான் நமது தர்மயுத்தம் நடக்கிறது. நமது தலைவர்கள் உருவாக்கிய சட்ட விதிகளை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த தர்மயுத்தம் நடக்கிறது. தொண்டர்கள் எல்லாம் நம் பக்கம், அவர்கள் பக்கம் யார் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். மக்களும் நம் பக்கம், நல்லவர்களும் நம் பக்கம் இருக்கிறார்கள்” எனக் கூறினார்.