ஓபிஎஸ் - இபிஎஸ்க்கு இடையே அமமுக பிரமுகர் செய்த குட்டி கலாட்டா

 
oe

அதிமுகவை ஒற்றை தலைமையின்கீழ் கொண்டுவந்துவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி,  ஓ. பன்னீர்செல்வம் இருவருமே போட்டி போட்டதால் அதிமுக தலைமையின் இரட்டை தலைமையின் கீழ் சென்றது.   இதற்கு இடையே நுழைந்து அதிமுகவை ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டுவந்து பொதுச்செயலாளர் ஆகிவிட வேண்டும் என்று முயன்று வருகிறார் சசிகலா.   ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை தனது தலைமையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று காய்நகர்த்தி வருவதாக அக்கட்சி வட்டாரத்தில் அவ்வப்போது தகவல் பரவி வருகிறது.

 இந்த நிலையில் வரும் ஜூன் 23ஆம் தேதியன்று அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு சென்னையில் கூடுகிறது.   இந்த பரபரப்பான சூழலில் எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச் செயலாளராக பதவியேற்கிறார் என்று அவரது ஆதரவாளர் ஒட்டியது போல ஒரு போஸ்டர் பெரியகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது . 

os

ஓ. பன்னீர் செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் ஓ.  பன்னீர்செல்வம் வீடு அமைந்திருக்கும் பகுதி,  வீடு செல்லும் சாலையில்,  அவரது மகன் ரவீந்திரநாத் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தின.

 விரைவில் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்க இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம் என்ற வாசகங்களுடன் பெரியகுளம் எம் .சுரேஷ் என்பவர் அந்த போஸ்டரை ஒட்டி இருந்தார்.   இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

a

 இது யார் பார்த்த வேலை என்று அவர்கள் ஆய்வில் ஈடுபட்ட போது.  எம் .சுரேஷ் என்பவர் அதிமுககாரரே அல்ல அவர் அமமுகவை சேர்ந்தவர் என்பது தெரியவந்து இருக்கிறது.   இதை அடுத்து தேனி மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளர் சையது கான்,  பெரியகுளம் நகர செயலாளர் ராஜா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் சுரேஷ் மீது புகார் அளித்திருந்தனர்.  கட்சிக்கு கலக்கத்தையும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அதிமுக உறுப்பினர் அல்லாத ஒருவர் ஒட்டிய சுவரொட்டி அவதூறு பரப்பி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  புகார் அளித்தனர்.   இதையடுத்து சம்பந்தப்பட்ட சுரேஷ் சிலரின் தூண்டுதலின்பேரில்  போஸ்டர் ஒட்டியதாக,   இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என்று எழுத்துப்பூர்வமாக அதிமுக மாவட்ட அலுவலகத்தில் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்.  இதையடுத்து  அவர் மீது கொடுத்த புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.