ஒரு மாசத்துக்கு ஒரு கோடி ரூபா தர்றேன்.. எந்த நாட்டுக்காவது ஓடிப்போயிடு..பாலியல் புகார் சொன்ன பெண்ணுக்கு அமைச்சர் மிரட்டல்

 
l

அமைச்சரின் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் சொன்ன பெண் பயிற்சியாளருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது . ஒரு கோடி ரூபாய் தருகிறோம் நாட்டை விட்டே ஓடிப்போய்விடு  என்று மிரட்டப்பட்டு இருக்கிறார்.  

 அரியானா மாநிலத்தில் விளையாட்டு துறை அமைச்சராக இருப்பவர் சந்திப் சிங்.  இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனுமானவர்.  இவர் மீது முன்னாள்  தேசிய அளவிலான வீராங்கனையும் ஜூனியர் தடகள பெண் பயிற்சியாளருமானவர் பாலியல் புகார் அளித்திருக்கிறார். 

 விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங் தனக்கு இன்ஸ்டாகிராமில் செய்தி அனுப்பினார் என்றும்,  தனது தேசிய விளையாட்டு சான்றிதழ் நிலுவையில் இருப்பதாகவும்.  அது தொடர்பாக சந்திக்க இருப்பதாகவும் அந்த செய்தியில் கூறியிருந்தார் என்றும் கூறியிருக்கிறார் அப்பெண்.  மேலும்,   என்னிடம் இருந்த சில ஆவணங்களுடன் அமைச்சரை சந்திக்க அவரது முகாம் அலுவலகத்திற்கு சென்றேன்.   

san

அங்கே சென்றதும் அமைச்சரின் என்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார் . என்னை அவரது வீட்டில் இருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார் .  எனது ஆவணங்களை மேஜையில் வைத்து விட்டு என் காலில் கை வைத்தார்.  உன்னை முதல்முறையாக பார்த்த போதே எனக்கு பிடித்து விட்டது என்று பேசிக்கொண்டே இருந்தார்.  நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் உன்னையும் நான் மகிழ்ச்சியாக வைத்திருப்பேன் என்று  சொன்னார்.  ஆனால் என் மீது வைத்த கையை நான் தட்டி விட்டேன். 

 உடனே அவர் ஆத்திரப்பட்டு  என் டீசர்ட்டை கிழித்து விட்டார்.  நான் அழுது கொண்டே இருந்தேன்.  உதவி கேட்டு சத்தம் போட்டேன்.   அமைச்சரின் ஊழியர்கள் அனைவரும் இருந்தும் யாரும் எனக்கு உதவவில்லை என்று புகாரில் கூறியிருக்கிறார்.

 பெண் பயிற்சியாளர் அளித்த புகாரில் ஐந்து பிரிவுகளின் கீழ் அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் அற்றவை என்று நிராகரித்திருக்கும் அமைச்சர் சந்தீப் சிங் , முதல்வர் மனோகர்லால் கட்டாரிடம் தனது விளையாட்டு இலாகாவை  ஒப்படைத்து விட்டதாக கூறியிருக்கிறார். ஆனால் அமைச்சரவையில் இருந்து அவர் விலகவில்லை.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் அந்த பெண் பயிற்சியாளர்,  சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.  முழு விவரங்களையும் விரிவாக குழுவிடம் அளித்திருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.   அமைச்சர் மீது புகார் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் அது தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில் தொடர்ந்து தனக்கு மிரட்டல் விடுத்து தொலைபேசி அழைப்புகள் வருவதாக புகார் கூறியிருக்கிறார் அந்த பெண் பயிற்சியாளர்.   நீ எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் போய்விடு மாசம் ஒரு கோடி ரூபாய் தருகிறோம் என்று மிரட்டல் விடுக்கிறார்கள் என்று மீண்டும் புகார் கூறியிருக்கிறார்.