அதிமுகவிற்கு ஒற்றை தலைமை அவசியம்; அது காலத்தின் தேவை - ஓ.எஸ்.மணியன்

அதிமுகவிற்கு ஒற்றை தலைமை அவசியம், அது காலத்தின் தேவை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பின் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒற்றை தலைமை விவகாரத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சென்னை கிரீன்வேஸ் சாலை அரசினர் குடியிருப்பிப் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் 6வது நாளாக இன்று ஆலோசனை நடத்தினர். முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர், நத்தம் விசுவநாதன், காமராஜ், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மோகன், எம்.சி.சம்பத், ராஜ்யசபா எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சரும் அதிமுக இளைஞரணி செயலாளருமான என். ஆர் சிவபதி, அதிமுக இளைஞர் பாசறை செயலாளர் பரமசிவம், அதிமுக மாணவரணி செயலாளர் எஸ் ஆர் விஜயகுமார் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டச் செயலாளர் தவிர்த்து பெரும்பாலான தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் எடப்பாடியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
எடப்பாடி பழனிசாமியை சந்தித்தபின் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஒ.எஸ்.மணியன், “அதிமுகவிற்கு ஒற்றை தலைமை அவசியம் காலத்தின் தேவை. ஒற்றை தலைமை தேவை என்ற தொண்டர்கள் விருப்பத்தை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசப்பட்டது. நடைபெறக்கூடிய பொதுக்குழுவில் அதற்கான முடிவு தெரியவரும். உட்கட்சி பிரச்சனையை கட்சியின் பொதுக்குழுவில் தான் பேச வேண்டும், வெளியில் பேச முடியாது. பெரும்பான்மையான கட்சியினர் ஒற்றை தலைமையை விரும்புவதாகவும், ஒற்றை தலைமையை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். அன்றைய சூழலில் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி ஆதரித்து முதலமைச்சர் ஆக்கினார்கள். ஒற்றை தலைமை வேண்டும் என தான் நாங்கள் கூறுகிறோம், பொதுக்குழு தான் அதற்கான வடிவத்தை கொடுக்கும். ஜெயக்குமார் எப்பொழுதுமே கட்சியின் செய்திகளை பத்திரிகையில் வெளியிடுவார். அதேபோல் தான் அன்றும் செய்திருப்பதாக கருதுகிறேன். பாஜக தலையிட வேண்டிய அவசியம் இல்லை. நான்கு ஆண்டு காலம் நெருக்கடியான காலகட்டத்தில் பொது மக்களின் நன்மதிப்பை பெற்று சிறப்பாக ஆட்சி செய்தவர் இபிஎஸ். கூட்டணியோடு 75 சட்டமன்ற உறுப்பினர்களை வென்று காட்டியவர் எடப்பாடி பழனிச்சாமி, எனவே அவருடைய ஆளுமை குறித்த கேள்வி அவசியமில்லை” எனக் கூறினார்.