திருச்சியிலும் ஓபிஎஸ் படங்கள் கிழிப்பு -எடப்பாடி டீம் தடாலடி
விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக பேனர்களில் ஓபிஎஸ் படங்களை கிழித்து எறிந்ததைப் போலவே திருச்சியிலும் அதிமுக பேனர்களில் உள்ள ஓபிஎஸ் படங்களை எடப்பாடி ஆதரவாளர்கள் கிழித்து எறிந்து வருகின்றனர்.
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ பன்னீர் செல்வத்திற்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்திற்கு வந்திருக்கிறது . இதனால் பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் களேபரத்துடன் முடிந்திருக்கிறது . பொதுக்குழு என்கிற பெயரில் அக்கிரமம் நடந்தது என்று பலரும் விமர்சிக்கின்ற வகையில், பொதுக்குழு கூட்டத்திற்கு வந்த ஓ. பன்னீர் செல்வத்தை வெளியே போ துரோகி வெளியே போ என்று சத்தம் போட்டார்கள் . அவர் மேல் தண்ணீர் பாட்டிலை வீசி எறித்தார்கள். பொதுக்குழுவில் ஓபிஎஸ் பேச வந்த போது மைக்கை ஆப் செய்தார்கள்.
இப்படி ஓ. பன்னீர் செல்வத்திடம் எடப்பாடி ஆதரவாளர்கள் அடாவடியில் ஈடுபட, ஓபிஎஸ் ஆதரவாளர்களை பொதுக்குழு கூட்டத்திற்கு உள்ளே அனுமதிக்க விடாதபடி வருகை பதிவேட்டை தூக்கிக்கொண்டு ஓடிவிட்டார்கள் எடப்பாடி ஆதரவாளர்கள்.
இந்த களேபரம் எல்லாம் போதாது என்று எடப்பாடி ஆதரவாளர்களை அமளியை பார்த்து அதிருப்தி அடைந்த பன்னீர்செல்வம் பொதுக்குழுவில் இருந்து வெளிநடப்பு செய்து அவர் வந்த வாகனத்தில் ஏற முற்பட்டால் அந்த வாகனத்தை பஞ்சர் ஆக்கி வைத்திருந்தார்கள். அந்த பொதுக்குழுவில் பன்னீர் செல்வத்தை தாக்குவதற்கும் திட்டமிட்டு இருந்தார்கள் என்று சொல்லி இருக்கிறார் அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி.
இது போதாது என்று பன்னீர்செல்வத்திற்கு எதிராக தொடர்ந்து தங்களை எதிர்ப்பை காட்டத் தொடங்கி விட்டனர் எடப்பாடி ஆதரவாளர்கள். விழுப்புரம் மாவட்டத்தில் சிவி சண்முகத்தின் ஆதரவாளர்களால் அதிமுகவின் பேனர்களில் இருந்த பன்னீர்செல்வம் படத்தை கிழித்து எறிந்தார்கள். தற்போது திருச்சியிலும் அப்படி நடந்திருக்கிறது . திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி அலுவலகத்தின் முன்பாக வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டில் இருந்த ஓபிஎஸ் படம் கிழிக்கப்பட்டிருக்கிறது. அலுவலகத்தில் உள்ளே ஒட்டியிருந்த ஓபிஎஸ் படமும் கிழிக்கப்பட்டு இருக்கிறது.
திருச்சியை பொறுத்தவரைக்கும் வெல்லமண்டி நடராஜன் ஓபிஸ் ஆதரவாக இருந்தாலும் மாவட்ட செயலாளர்கள் , பெரும்பாலான அதிமுகவினர் எடப்பாடிக்கு ஆதரவாக இருப்பதாக சொல்லப்படுகிறது .