தேர்தல் ஆணையத்தால் எதுவும் செய்ய முடியாது; 11ல் எடப்பாடி பொதுச்செயலாளராகிறார் - பொள்ளாச்சி ஜெயராமன்

 
po

அதிமுகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் எடப்பாடிதான் தலைமையேற்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் என்கிறார் பொள்ளாட்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. 

 எடப்பாடி அணியினர் அறிவித்துள்ளது போல் அடுத்த மாதம் 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறாது என்று தெரிவித்திருக்கிறார் ஓபிஎஸ் அணியில் உள்ள வைத்திலிங்கம்.   ஆனால் திட்டமிட்டபடி 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும்.   அந்த பொதுக்குழுவில் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிவித்திருக்கிறார் பொள்ளாச்சி ஜெயராமன்.

ee

 திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  இன்றைய தினம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.   இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களிடம் பேசினார் .  

அப்போது,   அதிமுக பொதுக்குழுவில் எழுந்த களேபரத்திற்குப் பின்னர் மக்கள்,  கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றுகூடி அதிமுகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமி தான் தலைமை ஏற்க வேண்டும் என்று தன்னெழுச்சி ஏற்பட்டிருக்கிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,   அதிமுகவை கட்சிக்கு அப்பாற்பட்டு வழிநடத்த முடியாது .  கட்சி தொண்டர்கள் தான் தலைமையை முடிவு செய்ய வேண்டும்.   ஜூலை 11ம் தேதி அதிமுகவின் பொதுச் செயலாளராக பொதுக்குழு மூலம் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்படுவார் என்றார்.   அவர் மேலும்,   அதிமுக பொதுக்குழு நடக்கலாமா இல்லையா என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய முடியாது.   இதில் 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் பொதுக்குழுவை நடத்தலாம் என்று தெரிவித்திருக்கிறார். 

 தொண்டர்கள் ஆதரவு இருப்பதால் ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக சொல்லப்படுவதற்கு,    கட்சியின் தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்குத் தான் ஆதரவாக உள்ளனர்.   ஓபிஎஸ் பயணம் செல்வது அவருடைய சொந்த விருப்பம் என்றார்.